பிற்பகலில் ரயில்களை இயக்க ஓய்வு பெற்ற சாரதிகள் அழைப்பு!

தொடரூந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (15) பிற்பகல் 9 புகையிரதங்கள் மாத்திரம் இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.
இதன்படி, பிரதான மற்றும் வடக்கு வழித்தடங்களில் 4 புகையிரதங்களும், கரையோர மற்றும் புத்தளம் மார்க்கத்தில் தலா 2 புகையிரதங்களும், களனிவெளி பாதையில் ஒரு புகையிரதமும் சேவையில் ஈடுபடவுள்ளதாக பிரதிப் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு கோட்டையில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு ரம்புக்கனை, கண்டிக்கு மாலை 5.10 மணிக்கும், கனேவத்தைக்கு மாலை 4.40 மணிக்கும், மஹவவிலிருந்து மாலை 6.00 மணிக்கும் பிரதான பாதையில் புறப்படும்.
சாகரிகா எக்ஸ்பிரஸ் ரயில் மருதானையில் இருந்து பெலியத்த வரை கரையோரப் பாதையிலும் மாலை 5.25 மணிக்கும் காலி வரையிலும், புத்தளம் மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து ஹலவத்தை வரை மாலை 4.30 மற்றும் 5.30 க்கும், களனிவெளி மார்க்கத்தில் அவிசாவளைக்கு மாலை 5.00 மணிக்கும் இயக்கப்படும்.
இதேவேளை பிற்பகலில் அதிக ரயில்களை இயக்க ஓய்வு பெற்ற சாரதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கான விசேட அனுமதியும் பெறப்பட்டதாக ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.
பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் விசேட பாதுகாப்புடன் காலை வேளையில் இவ்வாறு ரயில் இயக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.



