நாகர்கோவிலில் துப்பாக்கி பிரயோகம் - தமக்கு தெரியாது என்கின்றனர் பொலிஸார்!

நாகர்கோவிலில் துப்பாக்கி பிரயோகம், தடியடி தாக்குதல், ஆலய சப்பற கொட்டகையும் ஒரு பகுதி தீயில் எரிந்தது!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் சுடலை ஒன்று புதிதாக அமைப்பதற்கு நாகர்கோவில் கிழக்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
நாகர்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் ஏற்கனவே சுடலைகள் இருக்கின்ற போதும் குடும்ப சுடலை ஒன்று தனிநபர் ஒருவரால் அமைக்கும் முயற்சிக்கே மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டினால் ஒருவருக்கு கையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று மாலை 7:45 மணியளவில் சம்பவ இடத்திற்க்கு சென்ற பருத்தித்துறை பொலிசார் அங்கு இரவு கரப்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டவர்கள், அங்கு கூடியிருந்தவர்கள் மீது கற்களால் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொட்டான் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பெண் உட்பட இருவரும் அச்சம் காரணமாக மருத்துவ மனைக்கு செல்லாதுள்ளனர்.
இதே வேளை குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம நேரத்தில் நாகர்கோவில் முருகன் ஆலய சப்பற கொட்டகையும் தீப்பற்றி எரிந்துள்ளது.
உடனடியாக செயற்பட்ட மக்கள் இரண்டு பக்க கிடுகு கூரையும் எரிந்த நிலையில் சப்பறத்திற்கு எந்த சேதமும் இல்லாது பாதுகாத்துள்ளனர்.
இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தினை தொடர்புகொண்டு வினவியவேளை நேற்றையதினம் இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் யாழ். போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அது தொடர்பான விசாரணைக்காக நேற்றையதினம் குறித்த பகுதிக்கு சென்றோம். இதன்போது அங்கு திரண்ட மக்கள் எங்களை தாக்குவதற்கு முயற்சித்தனர் என்றனர்.
"நீங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினீர்களா?" என வினவியவேளை "அது தெரியாது என கூறினர்.



