வரிக் கொள்கைக்கு எதிராக 4 மாகாணங்களில் வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில்

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
அதன் ஆரம்ப கட்டமாக இன்று மேற்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஆகிய 04 மாகாணங்களில் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
பணிப்புறக்கணிப்பு இடம்பெறும் நான்கு மாகாணங்களிலும் அமைந்துள்ள வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் தடைபடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, புதிய வரித் திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் ஏற்கனவே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் இன்று முதல் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என கல்லூரி ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.



