சிசுவின் தாயை கைது செய்த பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் விசேட விசாரணைகள்

சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டமை மற்றும் அவர் அசௌகரியத்திற்கு உள்ளாக்கப்பட்ட விதம் தொடர்பில் பண்டாரவளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளுக்கு இணங்காதமை தொடர்பிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரால் குறித்த குழந்தையின் தாய் கைது nra;jik மற்றும் விசாரணையின் விவரங்களைப் பொருட்படுத்தாமல் அந்த பெண்ணுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதத்தின் மலசலகூடத்தில் கைவிடப்பட்ட குழந்தையின் தாய் மற்றும் தந்தை நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி இரவு கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லவிருந்த "மீனகயா" இரவு அஞ்சல் புகையிரதத்தின் கழிவறையில் விட்டுச் செல்லப்பட்ட போதே சிசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரயில் பெட்டியின் கழிவறைக்குள் குழந்தை ஒன்று இருப்பதாக ரயில் பயணிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக செயல்பட்ட கோட்டை ரயில்வே பாதுகாப்பு துறையினர் அங்கு சென்று சோதனையிட்டனர்.
அதன்படி, கூடையில் விடப்பட்ட இந்த சிசுவை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, குழந்தையின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் விசேட பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் பிரகாரம் பண்டாரவளை மண்சரிவு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் சென்று பெண்ணை தேடினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த பெண் குழந்தையின் தாய் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
பின்னர் பண்டாரவளை பொலிஸ் விசேட பிரிவின் மற்றுமொரு அதிகாரிகள் குழு சென்று 25 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்தனர்.



