ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நகர்வுகள் நடைபெறுகின்றன
-1-1-1.jpg)
இலங்கையில் ராஜபக்சர்களுக்கான எதிர்ப்புக்கள் குறைந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நகர்வுகள் இடம்பெறுகின்றன.
இதற்கான முதல் கட்டம்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் இரண்டு முறை ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய இரவு விருந்தின்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விருந்துபசாரம்,அவரது கொழும்பு விஜேராம மாவத்தையில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த இல்லம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் முன்னர் இந்த இடத்தில் குடியிருந்தனர்.
எனினும் அப்போதைய தோற்றத்தை விட, இந்த வளாகம் முற்றிலும் புதிய தோற்றத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் குறித்த சந்திப்பு மற்றும் விருந்துபசாரத்தில் மொத்தம் 62 அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மூன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது பசில் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலை குறித்து விளக்கமளித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஒரு பெரிய பேரணியை நடாத்துவதுடன், பெருந்திரளான மக்கள் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.



