வேலைக்கு வந்த 20 நிமிடத்தில் வீட்டில் பொருட்களை திருடிய பெண் கைது

பணிப்பெண் வேலைக்கு வந்த சில நிமிடங்களில் வீட்டில் பொருட்களை திருடிவிட்டு ஓடிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தெமட்டகொட சியபத் செவன வீட்டுத் தொகுதியில் வசிக்கும் 38 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி, டூப்ளிகேஷன் வீதியில் அமைந்துள்ள சொகுசு வீடமைப்புத் தொகுதியிலுள்ள தனது வீட்டில் பணிப்பெண் ஒருவர் பணியாற்றுவதற்கான விளம்பரத்தை வைத்தியர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் சந்தேகத்திற்கிடமான பெண் கடந்த 25ஆம் திகதி பணிப்பெண் என்று கூறி வீட்டுக்கு வந்துள்ளார்.
அதனையடுத்து, குறித்த பெண் 20 நிமிடங்களுக்குள் வீட்டில் இருந்த தங்கப் பொருட்களை திருடிக்கொண்டு தப்பிச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அங்கு பம்பலப்பிட்டி பொலிஸார் சிசிடிவி விசாரணைகளின் போது சந்தேக நபரான பெண்ணை வத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் தலங்கம, ஹோமாகம, அங்கொட, மஹாபாகே, வத்தளை, ஜாஎல, தெமட்டகொட, புளுமண்டல் மற்றும் நிட்டம்புவ ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் பணிப்பெண்ணாகச் சென்று சொத்துக்களை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பெண் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. .
கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



