சாரதி பற்றாக்குறையால் 24 ரயில்கள் ரத்து

சாரதி பற்றாக்குறை காரணமாக இன்று 24 பிராந்திய புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே.இடிபோலகே தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு அளிக்கும் தீர்மானம் காரணமாக ரயில் சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரக்கு ரயில்கள் மற்றும் நாவலப்பிட்டி, மாத்தளை, கண்டி, மஹவ, மட்டக்களப்பு போன்ற பல பிராந்திய ரயில்களும் ரத்து செய்யப்பட்ட பாதைகளில் அடங்கும்.
அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு அளிக்கும் கொள்கை முடிவு காரணமாக சுமார் 46 ரயில் சாரதிகள் அண்மைக் காலத்தில் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்பிரச்சினைக்கு தீர்வாக 27 புகையிரத சாரதிகள், 9 சாரதி உதவியாளர்கள் மற்றும் 23 புகையிரத கட்டுப்பாட்டாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்குமாறு பொது சேவை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நிலைமையை சமாளிக்கும் வகையில், அலுவலக ரயில் நாளை (07) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் மட்டக்களப்பு புகையிரத சேவைகள் எதிர்வரும் புதன்கிழமைக்குள் வழமைக்கு திரும்பும் எனவும் பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சாரதிகள் பற்றாக்குறை காரணமாக கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரை இயங்கும் உதயாதேவி புகையிரதம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.



