பனாமாவின் தலைவிதி இலங்கைக்கும் ஏற்படும்: கம்மன்பில எச்சரிக்கை

இலங்கையின் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்
அமெரிக்க புலனாய்வு முகவரான சிஐஏவின் பணிப்பாளர் வில்லியம் பேர்ன்ஸ் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி அதி இரகசிய விஜயத்தின் ஒரு அங்கமாக இலங்கை வந்துள்ளார்.
இந்த நாட்டுக்கு வந்தவர்கள் யார் என்று கேள்வியை தாம் எழுப்பி வந்தபோதும், அரசாங்கமும் அமெரிக்காவும் தங்கள் மௌனத்தைக் கடைப்பிடிக்கின்றன
எனினும் இந்த சந்திப்பின் போது இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான நான்கு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கம்மன்பில குறிப்;பிட்டுள்ளார்.
இதில் அமெரிக்காவுடன் உளவுத்துறை பகிர்வு நோக்கத்திற்காக புலனாய்வு பகுப்பாய்வு மையம் ஒன்றை அமைப்பதும் அடங்கும்.
இந்த யோசனை, முதன்முதலில் 2002 ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்தபோது வந்தது. உள்ளூர் புலனாய்வு சமூகத்தின் கடுமையான ஆட்சேபனைகளுக்கு மத்தியில் அப்போதைய அரசாங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்ததாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முன்மொழிவு தமது அணுகலின் கீழ் இலங்கைக்கு பயோமெட்ரிக் குடிவரவு கட்டுப்பாட்டு முறையை பரிசாக வழங்குவதாகும்,
இவ்வாறான நடவடிக்கைகள், சீன மற்றும் இந்திய முதலீட்டாளர்களை இலங்கையில் வர்த்தகம் செய்வதிலிருந்து பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மூன்றாவது முன்மொழிவின்படி, நீர்மூழ்கிக் கப்பல் தொலைத்தொடர்பு கேபிள்கள் மற்றும் தரவுகளுக்கான அணுகல் அடங்குகின்றன.
இதற்காக இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே புலனாய்வு தகவல்களை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இறுதி யோசனையாக, இரு நாடுகளுக்குமிடையிலான சோபா என்ற படைகளின் நிலைப்பாடாகும் என்று கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இறுதி யோசனையைத்; தவிர, ஏனைய யோசனைகளுக்கு ஜனாதிபதி உடன்படவில்லை எனத் தெரிகிறது.
எனினும் இலங்கையின் தேசிய பாதுகாப்பில் விட்டுக்கொடுப்புக்கள் ஏற்பட்டால், பனாமாவின் தலைவிதியை இலங்கைக்கும் ஏற்படும் என்று கம்மன்பில எச்சரித்துள்ளார்.



