ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் சமுர்த்தி வங்கியில் மோசடி!

2014-2018 ஐந்தாண்டுகளில் சமுர்த்தி வங்கி மற்றும் வங்கிச் சங்கங்களில் நடந்ததாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் காரணமாக கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளின் எண்ணிக்கை 135 ஆக பதிவாகியுள்ளது.
வங்கி நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதால், சமுர்த்தி பயனாளிகளுக்கு நிதி வழங்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைகள் இந்த ஊழல் முறைகேடுகளை சுட்டிக் காட்டியுள்ள போதிலும், அவற்றைத் தடுப்பதற்கு உயர்மட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அறிக்கை காட்டுகிறது.
இதற்கிடையில் ஊடகம் ஒன்றின் சார்பில் இயங்கி வரும் ஒலிபரப்பு மையத்தின் உபகரணங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை செலவுகளுக்காக 23 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டாலும், ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் திட்டத்தை செயல்படுத்துவது நிறுத்தப்பட்டது.
இந்த வானொலியின் நோக்கமானது வறுமை ஒழிப்பு மற்றும் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் தகவல் தொடர்பு மாதிரியை உருவாக்குவதாகும்.
இணைய வசதி இல்லாத வளமான குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இவ்வகையான இணைய வானொலி சேவை மூலம் பயனுள்ள மற்றும் வினைத்திறன் மிக்க சேவையை பெற முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2020ஆம் ஆண்டு சமுர்த்திக்கான மின்னூல் பத்திரிகையை வெளியிடுவதற்கு 53 இலட்சத்துக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளது.



