கிரீஸில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 57 பேர் உயிரிழந்தனர்.

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் இருந்து அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான தெசலோனிகிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரயிலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 350க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த ரயில் நள்ளிரவில் டெம்பே நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, தெசலோனிகியில் இருந்து லாரிசாவுக்கு எதிர்திசையில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் எதிரே வந்தது. இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில், இரண்டுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.
இரண்டு ரயில்களிலும் இருந்த பல பெட்டிகள் தடம் புரண்டு அருகில் உள்ள வயலில் விழுந்தன. இரண்டு ரயில்களும் அதிவேகத்தில் மோதியதால், சில பெட்டிகள் முற்றிலும் தடம் புரண்டன. சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இதில், அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலம் எழுந்தது.
இரண்டு ரயில்களும் மோதியதில் பயங்கர அதிர்வு ஏற்பட்டு அப்பகுதியே நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் தகவலின் அடிப்படையில், தீயணைப்பு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றன.
நள்ளிரவாகியதாலும், விபத்து நடந்த பகுதி புகை மண்டலமாக இருந்ததாலும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், மீட்புக் குழுவினர் "பிளாஸ் விளக்குகளை" பயன்படுத்தி மீட்புப் பணியை முடுக்கிவிட்டனர். கவிழ்ந்த ரயில் பெட்டிகளை வெட்டி, சிக்கிய பயணிகளை மீட்டனர்.
விடியற்காலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்தன, ஆனால் இந்த கொடூரமான விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 26 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 57 ஆக உயர்ந்துள்ளது.மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிர் திசையில் வந்தது எப்படி என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



