இன்றைய வேத வசனம் 03.03.2023: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல

கிறிஸ்துவின் இராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்னும் உண்மை, இவ்வுலக அரசியலிலிருந்து நம்மை விலக்கி வைத்துக்கொள்ளப் போதுமானதாகும்.
இவ்வுலக அரசியலில் நான் பங்கு வகிக்கிறவானாக இருப்பேனாயின், உலகப் பிரச்சனைகளுக்கும் அரசியல் தீர்வுகாணும் என்ற நம்பிக்கைக்கு வாக்களிப்பவனாக இருப்பேன்.
அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்கிறேன். ஏனெனில், உலக முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது என்று வேதம் சொல்கிறது. (#I_யோவான் 5:19).
சமுதாயத்தின் பிரச்சினைகளை அரசியலால் தீர்க்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் தீர்வுகள், அழுகிய புண்களுக்கு எண்ணெயைத் தொட்டுவைப்பது போலிருக்கும்.
நோயின் காரணத்திற்கு அந்த மருந்து தீர்வாகாது. நோயுற்ற சமுதாயத்திற்குக் காரணம் பாவமே என்பதை நாம் அறிவோம். பாவத்திற்கு விடைகாணாமல், வேறொரு முறையில் அந்நோயை அகற்ற முடியாது.
ஒரு விசுவாசி அரசியலில் ஈடுபடும்போது எவ்வெவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று சிந்திக்கிறார்.
அரசியலுக்கா, அல்லது கிறிஸ்துவின் பணிக்கா எதற்கு அதிக நேரத்தைக் கொடுப்பது என்று எண்ணுகிறான்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இதற்குப் பதிலுரைக்கிறார். மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ போய், தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கி (#லூக்கா.9:60).
இந்த உலகத்தின் பிரச்சனைகளுக்கு கிறிஸ்துவே விடையாக இருக்கிற காரணத்தினால், எல்லாவற்றிற்கும் மேலான முதலிடத்தை நற்செய்திப் பணிக்கே அளிக்க வேண்டும்.
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்கிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது (#II_கொரிந்தியர்.10:4).
இதனை அறிந்தவர்களாகிய நாம், தேசங்கள் மற்றும் உலகளாவிய வரலாற்றை நம்முடைய வாக்குச் சீட்டிற்கும் மேலாக, நமது ஜெபங்கள், உபவாசம், தேவனுடைய வார்த்தை ஆகியவற்றின் மூலமாகய் சீரமைக்க முடியும் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்.
தேவனுக்கென்ற கிரியைகளை நடப்பிக்க என்ன செய்யவேண்டும் என்று ஜனங்கள் இயேசுகிறிஸ்துவிடம் கேட்டபோது, அவர் அனுப்பினவரை விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியை என்றார் (#யோவான்.6:28-29).
ஆகவே, தேவனை விசுவாசிக்கும்படி ஜனங்களை வழிநடத்துவதே நம்முடைய பணியாகும். வாக்குச் சாவடிக்கு வழிநடத்துவது நம்முடைய பணியல்ல. ஆமென்!! அல்லேலூயா!!
இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே. இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். (#யோவான்.18:36)



