சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் சங்க மீனவர்களின் வலைகளை நாசம் செய்த இந்திய இழுவைப் படகுகள்

யாழ்ப்பாணம் - சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் சங்கத்தின் மூன்று மீனவர்களின் வலைகளை இந்திய இழுவைப் படகுகள் நாசம் செய்துள்ளனர்.
மூவருக்கு சொந்தமான 12 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
எமது கடல் எல்லையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர்கள் எல்லைக்குள் வந்த இந்திய இழுவைப் படகுகள் எமது வலைகளை நாசம் செய்துள்ளன. வெளிச்சம் பாய்ச்சாது எண்ணுக்கணக்கற்ற படகுகள் இவ்வாறு வருகை தந்து எமது தொழில் முதல்களை நாசம் செய்துவிட்டு சென்றுள்ளன.
இது குறித்து இலங்கை கடற்படைக்கு தெரிவித்தபோது, ரணில் ஐயா அவர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளார். ஆகையால் அவர்கள் வருகின்றார்கள். இதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்கிறனர்.
தொழில் செய்து உழைக்க வேண்டிய நேரத்தில் இவ்வாறு எமது வலைகள் அழிக்கப்படுவதால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இதற்கு முன்னர் நாங்கள் ஒரு தடவை பாதிக்கப்பட்டபோது அது குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் 5 கிலோ அரிசியும் டின் மீன்களும் இழப்பீடாக வழங்கினர். எமது இலட்சக் கணக்கான தொழில் முதல்களை அழித்துவிட்டு இப்படி வழங்குவது எமக்கு ஈடாகுமா?
இப்படி எல்லாம் செய்துவிட்டு கச்சதீவுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றனர். இதை நாங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வது?
இந்திய மீனவர்களால் கொழும்பு அல்லது தென்பகுதி மீனவர்களுக்கு இழப்பு ஏற்பட்டால் இந்திய மீனவர்கள் உள்நுழைவதை உடனடியாக நிறுத்தி இருப்பார்கள். ஆனால் நாங்கள் தமிழர் என்ற ரீதியில் தமிழனும் தமிழனும் அடிபட வேண்டும் என எண்ணி செயற்படுகின்றனர்.
நாங்கள் எங்களது வலைகளை பாதுகாக்க முதல் இந்திய இழுவைப் படகுகளிடமிருந்து எங்களது உயிரைப் பாதுகாக்க போராட வேண்டி உள்ளது. ஏனெனில் அவர்கள் எம்மை மோதுவதற்கு வருகின்றனர். இலங்கை கடற்படையிடமோ அல்லது இராணுவத்திடமோ கெஞ்சாத அளவிற்கு எங்களது தமிழ் மீனவர்களிடம் நாங்கள் சம்பவ இடத்தில் கெஞ்சினோம். ஆனால் அவர்கள் எங்களது நிலைமையை புரிந்துகொள்ளவில்லை.
இதுகுறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம். இப்படியே தொடர்ந்து நடந்தால் நாங்கள் எங்களது உயிரை விட வேண்டிய சூழல் ஏற்படும் என்றனர்.






