காலணியில் தேங்கிய நீரை குடித்தேன்: அமேசான் காடுகளில் நீண்ட நாட்களாக காணாமல் போய் மீட்கப்பட்ட நபர்

அமேசான் காடுகளில் புழு, பூச்சி போன்ற சிறிய விலங்குகளை சாப்பிட்டு 31 நாட்கள் வாழ்ந்த நபர் ஒருவர் மீட்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொலிவியாவை சேர்ந்த 30 வயதான ஜொனாதன் அகோஸ்டா என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டவராவார்.
ஜொனாதன் தனது நண்பர்கள் 4 பேருடன் அமேசானில் வேட்டையாடச் சென்ற போது தொலைந்து போனார்.
அவரை கண்டுபிடிக்க முயற்சித்தும் பலனில்லை. ஒரு மாதத்திற்கும் மேலாக அமேசான் காடு முழுவதும் நண்பர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது ஜோனாதன் இறுதியாக பத்திரமாக மீட்கப்பட்டார்.
தனது அனுபவத்தை விவரித்த அவர், தனது காலணியில் தேங்கிய மழைநீரை குடித்ததாக கூறியிருந்தார். மேலும் சாப்பிட புழு, பூச்சிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் தன்னிடம் கத்தியோ மின்விளக்குகளோ இருக்கவவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 31 நாட்களுக்குப் பிறகு ஜொனாதன் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவர் 17 கிலோவைக் குறைத்திருந்தார். மேலும், அவரைக் கண்டுபிடித்தவர்கள் நீர்ச்சத்து குறைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
அமேசான் காடுகளில் சரியான உணவு கூட இல்லாமல் நீண்ட நாட்களாக காணாமல் போன ஒருவரை காப்பாற்றியது அதிசயம் என்று பலர் கூறுகின்றனர்.



