முகநூல், இன்ஸ்டாகிராமிலும் நீலக் குறியீட்டை பெற கட்டணம் அரவிடப்போவதாக மேட்டா திடீர் அறிவிப்பு

#Facebook #Instagram #technology #Tech #Lanka4
Kanimoli
1 year ago
 முகநூல், இன்ஸ்டாகிராமிலும் நீலக் குறியீட்டை பெற கட்டணம் அரவிடப்போவதாக மேட்டா திடீர் அறிவிப்பு

பேஸ் புக்(Facebook,) இன்ஸ்ரகிராம் (Instagram) போன்றவற்றின் பயனாளிகளிடம் அவர்களது கணக்கை சரிபார்த்து உறுதி செய்வதற்கு  மாதாந்தம் கட்டணம் அறவிடும் திட்டம் ஒன்றை அவற்றின் தாய் நிறுவனமான மேற்றா (Meta) வெளியிட்டுள்ளது. 

பாவனையாளர்கள் தங்கள் கணக்கைச் சரிபார்த்து உறுதிசெய்வதன் மூலம் பாதுகாப்பையும் மேலதிக சேவைகளையும் பெற்றுக் கொள்வதற்காக இந்தச் சரிபார்ப்பதற்கான சந்தாக் கட்டணம் (pay-for verification) பரீட்சார்த்தமாக அறவிடப்படவுள்ளது என்ற தகவலை "மேற்றா" நிறுவுநர் மார்க் சூக்கேர்பர் (Mark Zuckerberg) தனது பேஸ்புக்  மற்றும் இன்ஸ்ரகிராம் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார். 

கணக்கைச் சரிபார்த்து உறுதி செய்வதற்கான கட்டணம் மாதாந்தம்  11.99 அமெரிக்க டொலர்களாக இருக்கும். ஐபோன் (iPhone) பயனாளிகளிடம் 14.99 டொலர்கள் அறவிடப்படும். 

இத் திட்டம் முதலில் இந்த வாரம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. விரைவில் ஏனைய நாடுகளில் செயற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்றா நிறுவுநரது அறிவிப்பில் "இத் திட்டத்தால் ஏற்கனவே சரிபார்த்து உறுதிப்படுத்தப்பட்ட (already verified) கணக்குகளில் எந்தவித மாற்றமும் இருக்காது" என்றும் தெரிவித்திருக்கிறார்.

இத் திட்டத்தின் கீழ் சந்தா செலுத்தித் தங்கள் கணக்குகளைச் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளாத பயனாளர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் இருக்கும், அது சகல பயனாளர்களுக்கும் கட்டாயமானதாஎன்பன போன்ற விவரங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை. 

அண்மையில் ருவீற்றர் நிறுவனம் அதன் பயனாளிகளுக்கு அறிமுகம் செய்தது போன்று கட்டணம் செலுத்தி தங்கள் கணக்கை உறுதி செய்கின்ற பேஸ்புக், இன்ஸ்ரகிராம் பயனாளிகளுக்கும் அவர்களது பக்கத்தில் நீல நிற அடையாளம் (blue badge) வழங்கப்படும்.

அது அவர்களது கணக்குக் கூடுதலான பார்வைகளைப் பெறுவதையும் வாடிக்கையாளர் சேவைகளில் முன்னுரிமை பெறுவதையும் கணக்குத் திருட்டுப் போன்றவற்றில் இருந்து கூடுதல் பாதுகாப்புப் பெறுவதையும் உறுதிப்படுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனிநபர் கணக்குகளுக்கு அவை சரிபார்க்கப்படும் போது அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களில்(government supplied ID document) உள்ள பெயர் விவரங்கள் அவசியம் என்றும், கணக்காளர்கள் தங்கள் முகம் தெரியும் சுயவிவரப் படத்தையும் (profile picture) கொண்டிருப்பது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

ருவீற்றர் நிறுவனம் "ருவீற்றர் ஃபுளு" ("Twitter Blue") என்ற பெயரில் அதன் பாவனையாளர்களது கணக்குகளை உறுதிசெய்து சரிபார்க்கும் இது போன்ற திட்டத்தைக் கடந்த டிசெம்பரில் அறிமுகம் செய்திருந்தது. 

"மேற்றா" நிறுவனம் முதல் தடவையாக கடந்த ஆண்டு அதன் விளம்பர வருமானத்தில் குறிப்பிடக் கூடிய இழப்பைச் சந்தித்தது. 

அதன் கீழ் இயங்கும் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள்  பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். 

மேலும் மரண அறிவித்தல்களுக்கு