இன்றைய வேத வசனம் 28.11.2022:என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 28.11.2022:என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது

நாம் எதில் நிலைத்திருக்க வேண்டும். நிலைத்திருப்பதினால் வரும் பலன் என்ன? என்று தான் பார்க்கப் போகிறோம்.

இயேசு கிறிஸ்துவை நம்முடைய சொந்த இரட்சகராகவும், கர்த்தராகவும் ஏற்றுக்கொள்ளும் அத்த தருணத்தில் நாம் மறுபடியும் பிறந்து தேவனோடு ஒரு அற்புதமான நேச உறவுக்குள் அடியெடுத்து வைக்கிறோம். இதுதான் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்பம்.

வேதத்தில் மத்தேயு எழுதின சுவிஷேசத்தில், நாம் விதைக்கிறவனுடைய உவமையைப் பார்க்கிறோம். அதிலே வழியருகே விழுந்த விதை, கற்பாறை நிலத்தில் விழுந்த விதை, முட்செடிகளில் விழுந்த விதை மற்றும் நல்ல நிலத்தில் விழுந்த விதையென்று நான்கு வகையாக நிலங்கள் பகுக்கப்பட்டிருக்கிறது.

இந்த உவமையில், நிலமானது நம்முடைய உள்ளத்தையும் அதின்மேல் கட்டப்படுகிற நம்முடைய வாழ்க்கையையும் குறிக்கிறது. இதில் நல்ல நிலமாக மாறுகிற நம்முடைய உள்ளம் இயேசுவுக்குள் நிலைத்திருப்பதின் பயனாகவே ஏற்படுகிறது.

யோவான் 15 ம் அதிகாரம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு அதிகாரம், இயேசு தன்னை மெய்யானத் திராட்சச்செடியென்றும், நாம் அவரில் நிலைத்திருக்கும் கொடியாகவும் ஒப்பிடுகிறார்.

நாம் நம் வீட்டிலும், வெளியிலும் சாதாரணமாய் பார்க்கும் ஒரு பொருள் மின் விளக்கு , மின்விளக்கு உருவாக்கப்பட்டதின் நோக்கத்தை நாம் பார்போமானால் அது இருளில் பிரகாசிக் கும்படியாகவே இருக்கிறது. ஆனாலும் மின்சாரம் இல்லாமல், அந்த விளக்கினால் எந்த ஒருப்பிரயோஜனமும் இல்லை.

அதேபோல , திராட்சைக் கொடியானது, சுவையான திராட்சைக் கனிகளைத் தரவேண்டுமென்றால், அந்தக்கொடி மெய்யானத் திராட்சைச் செடியோடு இணைப்பில் இருக்க வேண்டும்.

ஆம் நண்பர்களே! உங்களுடைய வாழ்க்கை, பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களுக்கு, குடும்பத்திற்கு, சபைக்கு, நீங்கள் வாழும் சமூகத்திற்கு பயனுள்ளதாய் இருகிறதா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நான் இயேசுவுக்காய் பயன்பட வேண்டும், அவருக்காய் பெரியக் காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் உங்களுக்குள் இருக்குமென்றால், அந்த ஆவல் நிறைவேற நீங்கள் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க வேண்டும்.

யோவான் 15 : 5-8 வசனங்கள் இப்படியாக சொல்கிறது, "நானே திராட்சச்செடி நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்."

நாம் ஒரு பிரயோஜனமுள்ள சீஷனாயிருக்க அல்லது சீஷியாயிருக்க விரும்பினால் நாம் அவருக்குள்ளும் அவருடைய வார்த்தை நமக்குள்ளும் நிலைத்திருக்க வேண்டும்.

ஆகவே, என் அன்புத் சகோதர, சகோதரிகளே, நான் இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய வார்த்தையிலும் நிலைத்திருந்து அவருக்கு நல்ல ஒரு சீஷனாய், சீஷியாய் இருக்கிறேனா என்று அனுதினமும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை சோதித்துப் பார்க்க வேண்டும்.

ஆண்டவர் உங்களை மிகுதியாய் ஆசீர்வதிக்கட்டும். தமக்கென பெரியக்காரியங்களை நீங்கள் செய்ய உங்களைப் பெலப்படுத்தட்டும். ஆமென்! அல்லேலூயா!!