இன்றைய வேத வசனம் 21.11.2022: அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 21.11.2022: அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்

"சீரான சிந்தை" சிந்தை என்றால் நமக்குத் தெரியும். அது என்ன சீரான சிந்தை என்று கேட்கிறீர்களா? 
ஆம் நண்பர்களே, சிந்தையை நாம் சீராக வைத்திருக்கிறோமா, இல்லை சிந்தை அங்கும் இங்குமாக அலை பாய்ந்து கொண்டு இருக்கிறதா? அதை எப்படி சீராக வைத்துக் கொள்வது என்பதைக் குறித்துப் பார்க்கலாம் ...

ஒவ்வொரு கிறிஸ்தவனும் தான் ஒரு ஜெயமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு சீரான சிந்தை உடையவனாக இருக்க வேண்டும்.

உங்களில் எத்தனை பேர் நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கையில் அவ்வப்போது இடறுகிறீர்களா? அவ்வப்போது பாவ இச்சைகளில் சிக்குண்டு தவிக்கிறீர்களா? அவ்வப்போது வீழ்ச்சியடையும் இவ்வாழ்க்கையை அனுதினமும் வெற்றியுள்ள வாழ்க்கையாக மாற்ற விரும்புகிறீர்களா? அதற்கு சீரான சிந்தை மிக மிக அவசியம்.

ஆம் நண்பர்களே, நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் அத்தருணத்தில், நம்முடைய ஆவி தேவன் அன்பால் உயிர்ப்பிக்கப்பட்டாலும், நம் சிந்தை (MIND) ஆத்துமாவின் (SOUL) பாகமாக, மாம்சத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. 

அதுமட்டுமல்ல, “எந்தப் பாவச் செயலின் பின்னும் சிந்தையிலிருந்து தோன்றிய ஒரு எண்ணம் இருக்கும்” (Every Act will be preceded by a thought).

ஆகவே, நம்முடைய சிந்தை புதுப்பிக்கப்படுவது, ஜெயமுள்ள கிறிஸ்தவ வாழ்விற்கு மிக அவசியம். “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" (#ரோமர் 12:2) என்றுச் சொல்கிறது.

இவ்வசனத்தின்படி, நம்முடைய மறுரூபமாகுதலுக்கு, நம்முடைய மனம் புதிதாகுதல் மிகவும் அவசியம். எதிலிருந்து எதற்கு மறுரூபமாகிறோம்? இரட்சிக்கப்பட்ட அத்தருணத்தில் கிறிஸ்துவுக்குள் ஒரு சிசுவாக மறுபடியும் பிறக்கிறோம்.

ஆனால் நாம் அப்படியே சிசுவாக இருந்துவிடுவது தேவனுடைய சித்தமல்ல. மாறாக, நாம் கிறிஸ்துவுக்குள் நாளுக்கு நாள் அவரைப்போலத்தானே மாற வேண்டும்.

நாம் சிசுவாக இருக்கும்பொழுது, நமக்கு பெலனில்லாதபடியினால் மாம்ச இச்சைகளுக்கு உட்பட்டு பாவத்தில் வீழ்கிறோம். இதைத்தான் பவுலடிகள் 1 கொரிந்தியர். 3 : 1,2 வசனங்களில் குறிப்பிடுகிறார்.
இப்படியிருக்க , நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளரும்படி, கிறிஸ்துவின் சிந்தையை உடையவர்களாக மாறவேண்டும்.

வேதம், கிறிஸ்துவைப் பற்றி ஓரிடத்தில், “அவர் நம்மைப் போல எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதிருந்தார் ” என்று சொல்கிறது.

ஆம் நண்பர்களே, கிறிஸ்துவின் சிந்தைதான் சீரான சிந்தை. அதை நாம் உடையவர்களாக மாறவேண்டும். அதைத்தான் வேதமும், “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” (பிலிப்பியர் 2 : 5) என்று வலியுறுத்துகிறது.

ஆகவே நீங்கள் உங்கள் வாழ்க்கையை சோதித்துப் பாருங்கள். ஆவிக்குரிய வாழ்வில் வளர்கிறீர்களா? இல்லைப் பின்னோக்கிப் போகிறீர்களா?

பதில் வரவில்லை என்று இருக்குமானால், பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலுக்கும், வேதவசன தியானத்திற்கும் அதிக நேரம் ஒதுக்குங்கள்.

நம்முடைய சிந்தையானது மாம்சத்தின் அழுக்குப் படிந்து காணப்படும். அதை புதுப்பிக்கும் ஒரே வழி, தேவனுடைய வார்த்தை என்னும் பரிசுத்த நீரால் அனுதினமும் நம் சிந்தையைக் கழுவுவதுதான்.
ஆகவே, நண்பர்களே இன்று ஒரு முடிவெடுங்கள், முடிவெடுப்பதோடு நின்று விடாமல், அந்த முடிவை செயலாக மாற்ற முயற்சி எடுங்கள். உதாரணமாக, வேதம்வாசிக்கும் பழக்கம் இல்லாதவராகநீங்கள் இருந்தால், இன்று முதல், ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு அதிகாரமாவது வாசிக்கத் தொடங்குங்கள்.
தேவனுடைய வார்த்தை உங்களைக் கழுவக் கழுவ, உங்கள் சிந்தை கிறிஸ்துவின் சிந்தையாக மாறும். ஆமென்!

“அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்.” (நீதிமொழிகள் 23:7)