சிறைச்சாலைகளில் மோசமான பெண்கள் இருப்பதாக கூறுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது – நடிகை தமிதா அபேரத்ன

சிறைச்சாலைகளில் மோசமான பெண்கள் இருப்பதாக கூறுவதில் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று புகழ்பெற்ற நடிகையான தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்கள் பட்டினியில் வாடுவதற்கு எதிராக, மக்களின் உரிமைகளுக்காக வீதிக்கு இறங்கிய போராடிய தரப்பினரை பயங்கரவாதிகள் என்ற போர்வையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைதுசெய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
போராட்டக்காரர்கள் பாரிய தவறிழைத்துவிட்டனர் என்பதை நிருபிக்கும் வகையிலேயே இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டதால் சவால்களை எதிர்கொண்ட தரப்பினரில் ஒருவராகவே நானும் இருக்கின்றேன்.
நாட்டு மக்களுக்காக போராடியதால் கைதுசெய்யப்பட்டமைக்காக எனது குடும்பத்தினர் பாரிய சவால்களை எதிர்கொண்டனர்.
எனக்காக கண்ணீர் வடித்தனர்.
சிறைச்சாலைகளில் மோசமான பெண்கள் இருப்பதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. நான் சிறைச்சாலைக்கு சென்று வந்தவர் என்பதால் சிறைச்சாலைகளில் எவ்வாறான பெண்கள் இருக்கின்றனர் என்பதை நானும் நன்கு அறிவேன்.
நாட்டில் நிர்வாக, அரச முறைமையால் ஏதேனும் ஒரு இடத்தில் தவறிழைத்த பெண்களே சிறைச்சாலைக்குள் இருக்கின்றனர்.
உண்மையில் அவர்கள் பாவப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.
பாரியளவில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர். ஆனால், கிராம் கணக்கில் போதைப் பொருள் விற்றதான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் வாழ்நாள் முழுவதும் சிறைக்கூடங்களில் வாடுகின்றனர்.
நாட்டையே தின்றுத்தீர்த்த தரப்பினர் வெளியில் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றனர். ஆனால், சிறிய திருட்டுக்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைதுசெய்யப்பட்டவர்கள் சிறைகளில் வாடுகின்றனர்.



