ரம்புக்கணையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்! ஒருவர் பலி ; பலர் படுகாயம்! (இரண்டாம் இணைப்பு ) Video

ரம்புக்கணையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, காயமடைந்த 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
அதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரியவருகிறது.
அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக அப் பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதால், ரம்புக்கனை - மாவனெல்லை, ரம்புக்கனை - கேகாலை மற்றும் ரம்புக்கன - குருநாகல் பிரதான வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டது.
இதன் காரணமாக 08 ரயில் பயணங்கள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேகாலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் படுகாயமடைந்த இருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
(இரண்டாம் இணைப்பு )
ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர்களில் 8 பேர் பொலிஸார் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



