புதுப்புது எண்ணங்களுடன் இ-காமர்ஸ் துறையில் ஜொலிக்கும் காத்தியா பவுச்சம்!

#technology #Article #today
புதுப்புது எண்ணங்களுடன் இ-காமர்ஸ் துறையில் ஜொலிக்கும் காத்தியா பவுச்சம்!

இணைய போக்குகளை மேம்போக்காக கவனிப்பவர்கள் கூட, சந்தா அடிப்படையில் உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட பொருட்களை அனுப்பி வைக்கும் இணைய நிறுவனங்கள் அதிகரித்திருப்பதை உணரலாம். சொல்லப்போனால் இணையத்தில் இப்போது உறுப்பினர் சேவை அல்லது சந்தா பெட்டி சேவை அலை வீசிக்கொண்டிருப்பதாக கருதலாம். சந்தா பெட்டி சேவை நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை அளிப்பதற்காக என்றே ’மை சப்ஸ்கிர்ப்ஷன் அடிக்‌ஷன்’ (mysubscriptionaddiction.com) எனும் இணையதளமும் இருக்கும் அளவுக்கு இந்த பிரிவில் எண்ணற்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இருப்பினும் புதுப்புது எண்ணங்களுடன் புதிய சந்தா பெட்டி சேவை நிறுவனங்கள் அறிமுகம் ஆகின்றன. போட்டியை சமாளிக்க முடியாமல் பல சந்தா பெட்டி சேவை நிறுவனங்கள் காணாமல் போய் கொண்டிருந்தாலும், டாலர் ஷேவ் கிளப், இப்ஸி, பார்க் பாக்ஸ், ஸ்டிச்பிக்ஸ் (இந்த தொடரில் ஏற்கனவே அறிமுகமான நிறுவனம்) ஷூ டேஸில் போன்ற நிறுவனங்கள் இந்த பிரிவில் சர்வதேச அளவில் முன்னணியில் திகழ்கின்றன. இந்திய அளவிலும் கூட பல நிறுவனங்கள் சந்தா பெட்டி சேவையை வழங்கி வருகின்றன.

உறுப்பினர் சேவை

இந்த அலையை துவக்கி வைத்த நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் பிர்ச்பாக்ஸ் (Birchbox) சேவையை துவக்கிய காத்தியா பவுச்சம் (Katia Beauchamp) மற்றும் அவரது தோழி ஹேலே பார்னா (Hayley Barna) பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

சந்தா அல்லது உறுப்பினர் சேவை என்பது வர்த்தக உலகில் பிரபலமாக இருக்கும் பழைய உத்தி தான். குறிப்பிட்ட ஒரு சேவையில் கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்தால், மாதம் அல்லது வார அடிப்படையில் அந்த சேவையை தொடர்ந்து பெறலாம். உதாரணத்திற்கு, தங்கள் அபிமான பத்திரிகையை தவற விடாமல் தொடர்ந்து வாங்க விரும்புகிறவர்கள் சந்தா சேவையை நாடுவது வழக்கம். இன்னும் பல துறைகளில் சந்தா சேவை பின்பற்றப்பட்டு வருகிறது.

இணைய யுகத்திற்கு ஏற்ற வகையில் இந்த உறுப்பினர் சேவை முறையை பயன்படுத்திக் கொள்வதற்கான யோசனையில் உதித்தவை தான், ஸ்டிச்பாக்ஸ், ரெண்ட் தி ரன்வே போன்ற சேவைகள். இதே வரிசையில் தான் பிர்ச்பாக்ஸ் வருகிறது. ஸ்டிச்பிக்ஸ் எப்படி உறுப்பினர்களுக்கு அவர்கள் விரும்பி தேர்வு செய்வதற்கான புதிய பேஷன் ஆடைகளை அனுப்பி வைக்கிறதோ, ரெண்ட் தி ரன்வே எப்படி கட்டண அடிப்படையில் புதிய ஆடைகளை வாடகை முறையில் பயன்படுத்த அனுமதிக்கிறதோ அதே போல பிர்ச்பாக்ஸ் நிறுவனம், கட்டண அடிப்படையில் உறுப்பினர்களுக்கு அழகு சாதன பொருட்களின் மாதிரியை அனுப்பி வைக்கிறது.

விற்பனையை இலக்காக கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக நிறுவனங்கள் அழகு சாதன பொருட்களின் மாதிரியை இலவசமாக அளிக்கும் வழக்கமான உத்தியை பிர்ச்பாக்ஸ் நிறுவனர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக கட்டணச் சேவையாக மாற்றி வெற்றியும் பெற்றுள்ளனர்.