பதினெண் சித்தர்களில் முதன்மையானவரும், சப்தரிஷிகளில் ஒருவருமான அகத்தியர் சித்தர் வாழ்க்கை வரலாறு... (சித்தர்களின் இரகசியம் பாகம் - 11)

Reha
2 years ago
பதினெண் சித்தர்களில் முதன்மையானவரும், சப்தரிஷிகளில் ஒருவருமான அகத்தியர் சித்தர் வாழ்க்கை வரலாறு... (சித்தர்களின் இரகசியம் பாகம் - 11)

பதினெட்டு சித்தர்களில் முதன்மையானவரும், சப்தரிஷிகளில் ஒருவருமான அகத்தியர், பொதிகை மலையில் தவம் செய்ததால் பொதிகை முனி என்றும், கும்பத்தில் பிறந்ததால் கும்பமுனி என்றும், அகத்தின் உள்ளே ஈசனை கண்டதால் அகத்தியர் என்றும் அழைக்கப்படுகின்றார். தமிழ் மொழியினை உருவாக்கியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

அகத்திய முனிவரை பற்றிய தகவல்கள் நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேதங்கள் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை இப்படி தமிழில் உள்ள பெரும்பாலான நூல்களிலும் அகத்தியர் பற்றிய ஏராளமான குறிப்புகள் உள்ளன.

காலத்தை கடந்து பல நூல்களில் அகத்தியரின் குறிப்புகள் இருப்பதால் அவரின் பெருமைகள் அன்றைய காலகட்டத்தில் உலகறிந்த ஒன்றாக இருந்திருக்க வேண்டும். சரி, இவர் பூமியில் எப்படி அவதரித்தார் என்பதனைப் பற்றியும், எதற்காக அவதரிக்கப் பட்டார் என்பதனைப் பற்றியும் இப்போது பார்ப்போம்.

அவதாரம் எடுத்ததன் நோக்கம்.

தாரகன் என்னும் அசுரன் கடும் தவம் புரிந்ததன் மூலம், கடலுக்குள் சென்று ஒளிந்து வாழும் வரத்தினையும், ஒரு குடம் அளவு உள்ளவரால் தான் தனக்கு மரணம் அமையவேண்டும் என்ற வரத்தையும் பிரம்மனிடம் இருந்து பெற்றுக்கொண்டான். இந்த உலகத்தை அசுரர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக, முனிவர்களையும், மனிதர்களையும் தன் அசுர கூட்டத்துடன் சென்று துன்புறுத்த ஆரம்பித்தான். இதனால் தேவர்களுக்கான பூஜைகளும், யாகங்களும் தடைப்பட்டது. தேவர்களுக்கான சக்திகளும் குறைந்தது.

தேவர்கள் இந்திரனிடம் சென்று தாரகன் பூமியில் செய்யும் கொடுமைகளைப் பற்றி கூறினார்கள். மனிதர்களையும், ரிஷிகளையும் காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டனர். இவர்களை காப்பாற்றுவதற்காக தேவலோகத்திலிருந்து இந்திரன் கோபத்துடன் தாரகனை அழிக்க பூலோகம் வந்தடைந்தார். இதனைக் கேள்வியுற்ற தாரகனோ கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான்.

தாரகனை பின் தொடர முடியாத இந்திரனுக்கு கோபம் வந்தது. இந்திரனால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இதற்கு தீர்வுகாண இந்திரன் முதலில் அக்னி பகவானை அழைத்து, உன் வெப்பத்தால் இந்த கடலை ஆவியாக்கி விடு என்று கூறினார். ஆனால் அக்கனி பகவானோ “கடல் நீர் இருந்தால் தான் மழை பெய்யும். தண்ணீர் இல்லாமல் எந்த ஜீவராசியும் பூமியில் வாழ முடியாது.

இந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன்.” என்று கூறிவிட்டார். இரண்டாவதாக இந்திரன் வாயு பகவானை அழைத்தார். வாயு பகவானின் வறண்ட காற்றினால் கடலை வற்ற வைக்கும்படி கூறினார். ஆனால் வாயு பகவானும், அக்னிதேவன் கூறிய காரணத்தை கூறி தன்னாலும் முடியாது என்று கூறிவிட்டார்.

இதனால் கோபமடைந்த இந்திரன் வாயு பகவானுக்கும், அக்னிபகவானுக்குனம் பூமியில் மனிதனாக பிறந்து கஷ்டப்பட வேண்டும் என்ற சாபத்தினை அளித்தார். அக்கனிபகவான் மித்திரா என்ற பெயரிலும், வாயு பகவான் வர்ணன் என்ற பெயரிலும் பூமியில் மனிதனாக பிறந்தனர். இந்த சமயத்தில் ஊர்வசி தேவலோகத்தில் செய்த தவறினால் இந்திரனின் சாபத்திற்கு ஆளாகி விட்டு பூலோகம் வந்து இருந்தாள்.

அவள் ஒரு குளத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது, மித்திரனும், வர்ணனும் அவளை கண்டனர். இப்படிப்பட்ட பேரழகியை அவர்கள் கண்டதில்லை. அப்போது அவர்களிடம் இருந்து வீரியம் வெளிப்பட்டது. மித்திரர் தன் கையில் இருந்த கும்பத்தில் வீரியத்தை வெளியிட்டார். வர்ணன் தன் வீரியத்தை தண்ணீரில் விட்டார். கும்பத்தில் இருந்து அவதரித்தவர் தான் அகத்திய முனிவர். தண்ணீரிலிருந்து அவதரித்தவர் தான் வசிஷ்ட முனிவர்.

அகத்தியர் குடத்தின் அளவே இருந்தார். அசுரன் தாரகனோ “குடத்தின் அளவு உள்ள ஒருவரால் தான் தனக்கு மரணம் நிகழ வேண்டும்” என்ற வரத்தைப் பெற்றவன். அகத்தியரின் பிறப்பைப் பற்றி அறிந்துகொண்ட தேவர்கள் அகத்தியரிடம் சென்று தாரகன் செய்து வரும் கொடுமைகளை பற்றி கூறினார்கள். தாரகனை அழித்து தங்கள் அனைவரையும் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் தேவர்கள். அகத்தியரும் தேவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

தாரகனை அழிக்க அகத்தியர் 12 ஆண்டுகள் தண்ணீரின் மேல் தவம் செய்தார். கடும் தவத்தினால் பல அறிய வரங்களைப் அகத்தியரால் பெறமுடிந்தது. அகத்தியர் இந்திரனுடன் இணைந்து தாரகனையும் அவனது அசுர குலத்தையும் அழிக்க சென்றார்கள். இதனை அறிந்த தாரகன் மறுபடியும் கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான். அகத்தியர் தன் தவ வலிமையினால் பெற்ற சக்தியின் காரணமாக கடல் நீர் அனைத்தையும் குடித்து விட்டார். அதன்பின்னர் இந்திரன் கடலுக்குள் சென்று தாரகனை வதம் செய்தார். தாரகனை வதம் செய்த பிறகு அனைத்து நீரையும் கடலிலேயே விட்டு விட்டார் அகத்தியர்.