மரியுபோல் நகரில் பொதுமக்கள் பதுங்கி இருந்த தியேட்டர் மீது ஏவுகணை தாக்குதல்; ரஷியா மறுப்பு..!

#world_news #Russia #Ukraine
மரியுபோல் நகரில் பொதுமக்கள் பதுங்கி இருந்த தியேட்டர் மீது ஏவுகணை தாக்குதல்; ரஷியா மறுப்பு..!

உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் இன்று 22-வது நாளாக நீடிக்கிறது. தலைநகர் கிவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது.

துறைமுக நகரமான மரியுபோலில் போர் தொடங்கிய நாளில் இருந்தே தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை உருக்குலைக்க ரஷியா தொடர்ந்து ஏவுகணை, குண்டுகளை வீசி வருகிறது.

மேலும் மரியுபோல் நகரில் இருந்து வெளியேறும் மக்களை ரஷிய படைகள் தடுத்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. அந்நகரில் தவிக்கும் மக்கள் பதுங்கு குழியிலும், கட்டிடங்களின் அடித்தளங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் மரியுபோல் நகரில் உள்ள சினிமா தியேட்டரில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் அடைந்து இருந்தனர். அந்த தியேட்டர் மீது நேற்று இரவு ரஷியா குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலில் தியேட்டர் முற்றிலும் சேதம் அடைந்து இருப்பதாகவும் அதில் பலர் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அங்கிருந்த மக்களின் கதி என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து மரியுபோல் உள்ளூர் கவுன்சில் வெளியிட்ட தகவலில் ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் தஞ்சம் அடைந்த தியேட்டரை அழித்து இருக்கிறார்கள். இதில் ஏராளமான மக்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம் என்று கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக மரியுபோல் நகரின் மேயரின் ஆலோசகர் பெட்ரோ ஆன்ட்ரூஷ்செங்கோ கூறுகையில்,  

நகரின் மிகப்பெரிய தங்குமிடம் அது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு தங்கி இருந்தனர். ஆனால் நகரத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் காரணமாக இடிபாடுகளை அகற்றுவதற்கான சாத்தியக்கூறு மிக குறைவாக உள்ளது என கூறினார். 

இந்நிலையில் தியேட்டர் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷியா மறுப்பு தெரிவித்து உள்ளது.

முன்னதாக மரியுபோல் நகரில் இதுவரை 2,400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 13 நாட்களாக தண்ணீர், மின்சாரம் இன்றி மக்கள் தவிக்கிறார்கள் என்றும், இன்னும் அந்நகருக்குள் 4 லட்சம் பேர் சிக்கி இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பொதுமக்களை குறிவைத்து தாக்கும் ரஷியாவுக்கு  கடும் கண்டனம் எழுந்து உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன்முறையாக புதினை போர்க்குற்றவாளி என்றும் உக்ரைன் தாக்குதல் போர்க்குற்றம் என்றும் கூறி உள்ளார்.

தியேட்டர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்சி, ரஷியா எங்கள் மக்கள் மீது நடத்தும் தாக்குதல்களால் என் இதயம் உடைந்து விட்டது' என கூறி உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!