பதினெண் சித்தர்களில் ஒருவரான மச்சமுனி சித்தர் வாழ்க்கை வரலாறு... (சித்தர்களின் இரகசியம் பாகம் - 10)

Reha
2 years ago
பதினெண் சித்தர்களில் ஒருவரான மச்சமுனி சித்தர் வாழ்க்கை வரலாறு... (சித்தர்களின் இரகசியம் பாகம் - 10)

சித்தர்கள் யுகங்கள் பல கடந்து தம்முடைய தேகத்தை கல்பதேகமாக மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருவார்கள். திரேதாயுகத்தில் அப்படி அபூர்வமாக வாழ்ந்த சித்தர்களில் மச்சரிஷியும் ஒருவர். மச்சமுனி, மச்சேந்திரர், மச்சேந்திரநாதர் என்ற பெயர்களெல்லாம் கொண்ட சித்தர் ஒருவரே.

ஓர் இடத்தை விட்டு வேறு ஓர் இடத்துக்குச் செல்லும் போதும், ஒரு காலட்டத்தைக் கடந்து வாழும் போதும் பெயர்கள் தான் வேறுபடுகின்றன. தலையில் சடைமுடியுடன் உடம்பெல்லாம் விபூதி பூசிக் கொண்டு, கையில் ஒரு பிரம்புத்தடியுடன் ஒரு சாமியார் இருந்தால், அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள், அவரை சடைசாமி என்று அழைப்பார்கள். ஒரு சிலர் அவரை விபூதி சாமி என்ற சொல்வார்கள். சிலர், பிரம்ரபு சாமி என்பார்கள்.

இதேபோல ஊர்ப் பெயரை வைத்து பூண்டிமகான், திருவலச்சித்தர் என்ற பெயர்களும் உண்டு. சித்தர்களுக்கு, உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன் என்பது கொள்கையாகும். சித்தர்களுடைய பெயர்கள் எல்லாம் அவர்களாக வைத்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு எந்தப் பெயரை வைத்தாலும் அதில் அக்கறை காட்டுவதுமில்லை. தூல உடம்புக்கு எந்தப் பெயர் வைத்தால் என்ன என்று இருப்பார்கள். மச்சமுனி, அகத்தியர் காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு சமயம், கடற்கரை யோரத்தில், சிவபெருமான், உமையம்மைக்கு தாரக மந்திரத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார். உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கையில் அம்மைக்கு உறக்கம் வந்துவிட்டது.

அக்கடலில் வசித்த மீன் ஒன்றின் வயிற்றில் இருந்த கருவானது, இம்மந்திரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டது. பின் வெளியே வந்த அந்த மீன் வயிற்றுப் பிள்ளைக்கு சிவபெருமான், மச்சர் என்ற பெயரைக் கொடுத்தார். மச்சரின் உருவத்திலிருந்து தலை மனித வடிவமும், உடல் மீனின் வடிவமும் கொண்டது என்ற குறிப்பு, நமக்குக் கிடைக்கிறது. முழவதும் மனித வடிவம் கொண்டதே மச்சரின் உருவம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இது மச்சமுனியின் அவதார வரலாறு. பிறக்கும் போதே சிவபெருமானின் உபதேசத்தோடு பிறந்தவர் என்பதால் மச்சமுனிக்கு தவயோகம் தானாகவே நேர்ந்தது. அவர் நீண்ட நெடுங்காலம் யோக வழியில் தவம் மேற்கொண்டார். அட்டமா சித்துக்கள் அனைத்தும் கைவரப் பெற்றார். ஊர் ஊராக சஞ்சாரம் செய்து வரும்போது ஓர் ஊரில், இவர் உணவு வேண்டி ஒரு வீட்டின் முன் நின்றார். இவருக்கு பிச்சையிட்ட அந்த வீட்டுப் பெண் இவரை வலம் வந்து வணங்கினாள்.அந்தப் பெண்ணனின் முகவாட்டத்தைப் பார்த்த சித்தர், என்ன காரணம் என்று கேட்டார்.

தனக்கு வெகு காலமாக புத்திரப்பேறு வாய்க்கவில்லை என்று தன் மனக்குறையைக் கூறி, தனக்குப் புத்திரப் பேறு அருளுமாறு அந்தப் பெண் சித்தரை வேண்டினாள். மச்சமுனி, அவளுடைய நிலைக்கு இரக்கங்கொண்டு விபூதி பிரசாதம் கொடுத்து இதனை நீ உட்கொள் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். இந்தப் பெண் விபூதியைப் பெற்றுக் கொண்டு தனது பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் நடந்தவற்றைக் கூறினாள். அவள் இந்த முனிவர் மாய வேஷக்காரன்.

விபூதி கொடுத்து உன்னை மயக்கி, தன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விடுவான் என்று கூறினாள். அந்தப் பெண் விபூதியை அடுப்பிலிருந்த நெருப்பில் போட்டுவிட்டாள். பின்பு அடுப்புச் சாம்பலை அள்ளி வீட்டின் புழக்கடையில் கொட்டிவிட்டு இந்த நிகழ்ச்சியை அறவே மறந்துபோய்விட்டாள். வருடங்கள் சில சென்றன. மச்சமுனி மீண்டும் அவ்வழியே வந்து தான் விபூதி கொடுத்த அந்தப் பெண் வீட்டின் வாசலில் நின்று அவளை அழைத்து உன் பிள்ளையை நான் பார்க்க வேண்டும், அழைத்து வா என்றார். அந்தப் பெண் உண்மையை மறைக்காது நடந்தவற்றை அப்படியேக் கூறினாள்.

அந்த அடுப்புச் சாம்பல் எங்கே என்று மச்சமுனி வினவ, தன் வீட்டுப் பழக்கடையில் உள்ள குப்பையைக் காட்டினாள். மச்சமுனி அந்த இடத்துக்குச் சென்று கோரக்காவா என்று குரல் கொடுத்தார். அங்கே ஓர் அதிசயம் நடந்தது. சாம்பல் குப்பையிலிருந்து, சித்தர் விபூதி கொடுத்த காலம் முதல், பிள்ளையை அழைத்த காலம் வரை உள்ள ஆண்டுகள் நிரம்பிய வயது கொண்ட சிறுவன் ஒருவன், ஏன்? என்று பதில் குரலுடன் வெளியே வந்தான். அந்தச் சிறுவனை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார் சித்தர்.

சிறுவனோ தான் மச்சமுனியையே குருவாகக் கொண்டு அவரைத் தொடர்ந்து வர விரும்புவதாகக் கூறினான். அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் மச்சமுனி. இருவரும் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். நீண்ட நெடுங்காலம் பாரதக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருவரும் தவம் செய்தனர். 

வட இந்தியாவில் வாழ்ந்த நவநாத சித்தர்களில் இவரும் ஒருவராக மச்சேந்திர நாதர் என்ற பெயரில் குறிக்கப்படுகிறார். மச்சமுனி இரசவாத வித்தை, வைத்தியம், வாதநிகண்டுகள் உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் தமிழ்நாட்டில் தற்போது திருப்பரங்குன்றம் வரை பெயர் கொண்ட தலத்தில், முக்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. திருப்பரங்குன்றம், முருகப்பெருமானின் அருள் கூடிய அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பெருமை பெற்றது நாம் அறிந்ததே.

மச்சமுனியைக் குருவாகக் கொண்ட கோரக்கரும் சித்திகள் பல அடைந்து சிறப்பு பெற்றவர். இவரும் வடநாட்டில் கோரக்கநாதர் என்ற பெயருடன் குறிக்கப்படுகிறார். இந்தியாவில் உள்ள கோரக்பூர் என்னும் நகரப் பகுதியில் இவர் வாழ்ந்ததாகவும், இவர் பெயராலேயே அந்த நகரம் குறிக்கப்படுகிறது என்றும் ஒரு செய்தி உண்டு. சீனா, நேபாளம் ஆகிய இடங்களில் கோரக்கர் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.