HIV நோயிலிருந்து குணமடைந்த பெண்; சாத்தியமாக்கிய எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை

HIV என்று அழைக்கப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கும் நோய் (Human Immuno Deficiency Virus), மிகவும் கொடிய வைரஸ் ஆகும்.
இந்த தொற்று ஏற்பட்டால் மரணம் நிச்சயம் என்ற நிலையில், இது இதுவரை குணப்படுத்த முடியாததாக கருதப்பட்டது. ஆனால் விஞ்ஞானிகள் இந்த வகையில் பெரும் வெற்றியை அடைந்துள்ளனர். ஸ்டெம்செல் அறுவை சிகிக்சை மூலம் இது சாத்தியம் ஆகியுள்ளது.
அமெரிக்காவில் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் முழுமையாக குணமடைந்து, HIV தொற்றில் இருந்து குணமடைந்த முதல் பெண்மணி என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலகில், ஹெச் ஐ வி நோயால் குணமான இந்த அமெரிக்க பெண்ணையும் சேர்த்து இதுவரை மூன்று பேர் மட்டுமே ஹெச்.ஐ.வி தொற்று நோயில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தி பர்னில் நோயாளி என்று அழைக்கப்படும் திமோதி ரே பிரவுன் என்பவர், HIV நோயிலிருந்து குண்டைந்து 12 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். பின்னர் 2020 ஆண்டு புற்றுநோயால் இறந்தார். 2019 ஆம் ஆண்டில், HIV நோயால் பாதிக்கப்பட்ட ஆடம் காஸ்டிலிஜோவுக்கும் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு அவரும் குணமடைந்தார்.
கடந்த 2013ம் ஆண்டு, இந்த அமெரிக்க பெண்ணிற்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறூதியானது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இவருக்கு லுகேமியா என்னும் ரத்த புற்று நோய் இருப்பதும் கண்டறியப்பட்டது. இரத்த புற்றுநோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது. மருத்துவர்கள் தொப்புள் கொடி ரத்தம் மூலம் சிகிச்சை கொடுத்தனர். ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதில், HIV வைரஸுக்கு எதிராக இயற்கையான எதிர்ப்பைக் கொண்ட ஒருவரின் ஸ்டெம் செல்கள் தானம் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது, சிகிச்சை பெறும் பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நெருங்கிய உறவினர்களும், ரத்த தானம் செய்தனர். கடந்த 4 ஆண்டுகளில் அவர் இரத்தப் புற்றுநோயிலிருந்து முற்றிலும் குணமடைந்தார்.
பின்னர் 14 மாதங்களுக்கு அவரது உடல் நிலையை கண்காணித்ததில் ஹெச் ஐ வி தொற்று பாதிப்பு திரும்பவில்லை என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் எச்.ஐ.வி. தொற்றுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகிலேயே எச்.ஐ.வி. தொற்றிலிருந்து குணமடைந்த முதல் பெண் இவர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.



