காதல் தூதர்கள் ஜாக்கிரதை. காதல் விதிகள். பாகம் - 8.

#Love #Article #Tamil People
காதல் தூதர்கள் ஜாக்கிரதை. காதல் விதிகள். பாகம் - 8.

காதலர்களை ஒன்று சேர்ப்பதில், காதல் தூதர்கள் உபயோகமாக இருப்பார்கள்.  குறிப்பாக தோழன், தோழி, அண்டை வீட்டார், சிறுவர்கள், சில சமயம் உறவினர்கள் கூட தூது செல்வார்கள்.

காதல் தூது செல்வதற்கு பலர் தயாராக இருப்பது ஏன் தெரியுமா? உண்மையான காதலர்களை சேர்த்துவைக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் காதலர்களை சேர்த்துவைக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் இவர்களுக்கு இருப்பதுதான் என்று நினைத்து விடாதீர்கள்.  அவர்கள் வாழ்வில் நடக்காத ஒரு விஷயம் இன்னொருவர் வாழ்வில் எப்படி நடந்தேறுகிறது என்பதை அருகில் இருந்து பார்க்கும் ஆர்வம் தான் இப்படி தூதர்களாக மாறச் சொல்கிறது.

மிகக் கடினமான காலகட்டத்தில் காதலனும் காதலியும் சந்திக்க இயலாத நேரத்தில் என்பதைவிட, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் தவிக்கும்போது இவர்களது பங்கு முக்கியமாக இருக்கலாம்.  சிலர் தாமாகவே முன்வந்து உதவ வருவார்கள்.

மனத்தைத் திறந்து சொல்ல பயமும், சங்கோஜமும் இருக்கும் காலத்தில் பலர் தூதுவர்களைத் தேடி அலைவார்கள்.  அரைகுறை பழக்கத்தில் இருப்பவர்களையும் தூதுவர்களாக அனுப்புவார்கள்.  முழுமையான நம்பிக்கை இல்லாதவர்களை தூதர்களாக அனுப்பும்போது காதல் சிக்கலாக மாறுமே தவிர, கண்டிப்பாக ஜெயிக்காது.

காதல் என்பது ஒரு வேலையாக இருந்தால் உதவுவதற்கு சிலரை நியமித்துக்கொள்ளலாம்.  ஆனால் காதல் என்பது அனுபவம், உங்கள் அனுபவத்தை நீங்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியுமே தவிர பிறரால் அல்ல.  மேலும் காதல் என்பது ஒரு ரகசியப் புதையல் போன்றது.  அதை யாருக்கும் தெரியாமல் நெஞ்சுக்குள் அடைகாப்பது தான் சந்தோசம்.
காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கருத்து, காதலுக்குத் தூதர்கள் தேவையில்லை என்பதுதான்.  அதனால்தான் நம் பழந்தமிழர்கள் மேகம், மயில், புறா, அன்னம், காற்று போன்றவற்றை காதலுக்குத் தூதர்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.

சில இடங்களில், தோழி காதல் தூது செல்வதாக வருகிறதே தவிர தோழன் தூது வருவதாகத் தெரியவில்லை.  காதல் என்பது இரண்டு பேருக்குள் இருக்கும்போது ரகசியமாக இருக்கும்.  மூவருக்குத் தெரியும்போது அது விளம்பரமாகிவிடும்.

சரி.  காதல் தூதர் மூலம்  என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பதை பார்க்கலாம்.

முதல் மற்றும் முக்கியக் காரணம், தம்பட்டம் அடித்தல், தனக்கு ஒரு காதலரை தெரியும் என்பதை ஒரு தகுதியாக நினைத்து காதலரிடையே நடக்கிற காதல் விஷயங்களை அம்பலப்படுத்துவார்கள்.  உள்நோக்கத்துடன் இல்லை என்றாலும் ஜாலிக்காக இவர்கள் பேசும் பேச்சு, காதலர்களுக்கு எதிர்பாராத இடைஞ்சல்களை உருவாக்கலாம்.

சில காதல் தூதர்கள் பிளாக்மெயில் செய்பவர்களாக மாறிவிடுவது உண்டு.  ஆரம்பத்தில் நண்பர்களாக இருப்பவர்கள் ஏதாவது ஒரு பிரச்சனை.  சிக்கல் ஏற்படும்போது காட்டிகொடுபவர்களாக மாறிவிடுவது உண்டு.

காதலர்களின் அவசரம், அவஸ்தைகளை தூதர்கள் உணரமாட்டார்கள்.  ஒரு கடிதம் கொடுத்து உடனே பதில் கடிதம் அல்லது தகவல் எதிர்பார்ப்புகள், ஆனால் தூதர்கள் அவருக்கு வசதியான நேரத்தில் கடிதத்தைக் கொடுப்பாரே தவிர, காதலர்களின் அவசரத்துக்கு அல்ல.

சிலர் நண்பர்கள் என்ற போர்வையில் இருக்கும் பொறாமைக்கார எதிரிகளாக இருப்பார்கள்.  இப்படிப்பட்டவர்களை காதல் தூதர்களாக அங்கீகரித்தால் இருவரிடமும் சண்டை மூட்டிவிட்டு பிரிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிடுவார்கள்.  காதலுக்கு உதவியாக இருந்தேன் என்ற அகங்காரத்தில் இருக்கும் தூதர்களுக்காக ஏகப்பட்ட பணம், உதவிகள் அளிக்கவேண்டி வரலாம்.

இதில் சில நன்மைகள் இருந்தாலும், அதைவிட தீமைகளே அதிகம் என்பதால், காதல் தூதர்களாக யாரையும் வைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.  காதலர்கள் சில பொய் கூறியிருப்பார்கள்.  அது தெரியாமல் இவர் உண்மையை நேரம் காலம் பார்க்காமல் உளறினால் போச்சு! அதுவே காதலுக்கு ஆபத்தாக முடியும்.

ஒவ்வொரு தூதருக்கும் நான் காதலிப்பவனாக இருக்க வேண்டியவனே தவிர, தூதனாக இருப்பதல்ல என்ற எண்ணம் இருக்கும் என்பதால் ஒரு அளவுக்கு மேல் உதவமாட்டார்கள்.  நமக்கு பசி எடுத்தால் எப்படி நாம் சாப்பிட்டால் மட்டுமே அடங்குமோ, அப்படியே காதல் சம்மந்தப்பட்ட அத்தனை வேலைகளையும் நாமே பார்த்துக்கொள்வதுதான் சிறந்தது.  பிரச்சனைகள் இருக்காது.