அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகத் திகழும் திருமூலர் வரலாறு... (சித்தர்களின் இரகசியம் பாகம் - 03)

Reha
2 years ago
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகத் திகழும் திருமூலர் வரலாறு... (சித்தர்களின் இரகசியம் பாகம் - 03)

சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.

அதனால்தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.

இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை குறிப்புகள் இதோ-

  • திருக்கயிலாயத்தில் திருமூலருடைய பெயர் சுத்த சதாசிவர்.
  • சுந்தர நாதர் என்ற பெயரும் இவருக்கு உள்ளது.
  • திருமால் பிரம்மா இந்திரன் முதலிய தேவர்களுக்கு நெறி அருளும் அசையா சக்தியாக இருக்கும் இறைவனையே குருவாகப் பெற்றவர் இவர்.
  • இறைவனின் திருவருளால் அவரின் திருவடியில் இருந்த எட்டு யோகிகளுள் ஒருவராக இருந்தார்.
  • அவர்களது பெயர்கள் 1. சனகர் 2. சனந்தனர் 3. சனாதனர் 4. சனற்குமாரர் 5. சிவயோக மாமுனிவர் 6. பதஞ்சலி 7. வியாக்கிரமர் 8. திருமூலர். 
  • இவர் அட்டமா சித்திகளை கைவரப் பெற்றவர் ஆவார்.
  • இவருக்கு 7 சீடர்கள் உள்ளார்கள்.
  • அவர்களது பெயர்கள் 1. மாலாங்கன் 2. இந்திரன் 3. சோமன் 4. பிரமன் 5. உருத்திரன் 6. காலாங்கி நாதன் 7. கஞ்ச மலையன் .
  • எண்ணில் அடங்காத கோடிக்கணக்கான ஆண்டுகள் உடலுடன் இறைவனின் திருவடிக்குக் கீழே இரவு பகல் இல்லாத இடத்தில் (சூட்சும வெளி) அமர்ந்திருக்கிறார் .
  • தம்முடைய அமிழ்தப் பாலால் 9 கோடி யுகங்கள் இறைவனுக்கு அர்ச்சனை செய்திருக்கிறார் 70 கோடி 100 ஆயிரம் ஆகமங்கள் மொத்தம் உள்ளது.
  • இந்த ஆகமங்களை 9 பகுதியாக பிரித்து இறைவன் இவருக்கு உபதேசித்தார் .
  • அப்போது இறைவனின் திருநடனத்தை கண்டு அந்த பேரின்பத்திலேயே 1 கோடி யுகங்கள் திளைத்திருந்தார்.
  • அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்கிறார் திருமூலர்.
  • இவரது குரு நந்தி தேவர்.
  • மூலன் என்ற இடையனின் உடலினுள் புகுந்து ஆண்டுக்கு ஒரு பாடல் என்ற வீதத்தில் 3000 பாடல்களை பாடி திருமந்திரம் எனும் நூலை இயற்றினார்.
  • சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலில் சமாதி கொண்டார்.
  • இவரது ஆயுட் காலம் 3000 ஆண்டுகள், 13 நாட்கள்.

திருமூலரின் காலம் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தியது (கி.மு. 5000). திருமூலர் திருமந்திரம் எழுத எடுத்துக் கொண்டது 3000 வருடங்கள். அதன் பிறகு தற்கால ஏழாம் நூற்றாண்டில் (கி.பி. 637 முதல் 653) அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவ சமயக் குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர்களில் ஒருவருமான திருஞானசம்பந்தர் உதித்தார்.

அவர் தென்னாட்டிலுள்ள சைவ ஆலயங்கள் அனைத்தையும் சென்று வழிபட்டு அதில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடிச் சென்ற காலங்களில் திருவாவடுதுறை திருத்தலத்திற்கும் வந்திருந்தார்.

அப்போது கோயிலுக்குள் நுழைந்தவுடன் இறைவனின் திருவருளால் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் அற்புதமான தமிழ் வாசனை அவரை வந்தடைந்தது. அதனால் ஈர்க்கப்பட்டுத் தன்னுடன் வந்தவர்களிடம் இங்கே அருமையான தமிழ் வாசனை வருகின்றது என்ன என்று பாருங்கள் என்று கூறி மண்ணைத் தோண்டச் செய்தார். அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளைக் கண்டு எடுத்தார்.

அவற்றை படித்து உணர்ந்து அதன் அருமை பெருமைகளை உலகோர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று அதை வெளியிட்டு அருளிச் செய்தார். அவருக்கு பின்பு வந்த சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் திருமூலரின் வரலாற்றை அருளியிருக்கிறார்.

அவருக்குப்பின் வந்த சேக்கிழார் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றித் தான் எழுதிய பெரிய புராணத்தில் திருமூலரை முப்பத்து ஒன்றாவதாகச் சேர்த்து திருமூலரின் வாழ்க்கை வரலாற்றையும் திருமந்திரப் பாடல்களின் குறிப்பையும் எழுதி வைத்தார்.

அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியில் திருமூலரின் வரலாற்றை அருளியிருக்கிறார். சைவ சான்றோர்கள் பலர் அருளியிருந்த சைவத் திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி ஒன்றாகத் தொகுத்த போது திருமூலர் அருளிய திருமந்திரத்தையும் பத்தாவது திருமுறையாகத் தொகுத்து அருளினார்.

திருமூலர் எழுதிய திருமந்திர மாலை பாடல்களை உலகத்தவர்களால் முதலில் தமிழ் மூவாயிரம் என்ற பெயரிலேயே அழைத்தார்கள். பிற்காலத்தில் வந்த சான்றோர்கள் திருமந்திரத்தில் நிரம்பியிருந்த மந்திரங்களும் தந்திரங்களும் மனித சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால் அதை திருமூலர் அருளிய திருமந்திரம் என்று மாற்றி வைத்தார்கள்.

திருமூலர் பரம்பொருளாகிய இறைவனைப் போற்றிப் பாடியருளிய திருமந்திரத்தில் பாயிரம் தலைப்பு தவிர்த்து ஒன்பது தந்திரங்கள் அமைந்துள்ளது. இந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களையும் அதிகாலையில் எழுந்து அவற்றின் பொருள் உணர்ந்து ஓதுவோர் பிறவிப் பாசம் நீங்கி இறைவனை அடைவர்கள் என்பது திருமூலரின் திருவாக்கு.

 

மேலும் மரண அறிவித்தல்களுக்கு