காந்தியின் முகம் பொறித்த நாணயத்தை வெளியிட்ட பிரித்தானியா
இங்கிலாந்து அரசு ஒவ்வொரு வருடமும் உலக தலைவர்களில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தி வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அகிம்சை வழி தந்தை மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயத்தை இங்கிலாந்து அரசு வெளியிட உள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்தின் பொருளாதார பிரிவு தலைவர் ரிசி சுனாக் கூறுகையில், ‘‘மகாத்மா காந்தியை பெருமைப்படுத்தும் வகையில் இங்கிலாந்து அரசு அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட உள்ளது. அந்த நாணயம் தங்கம் மற்றும் வெள்ளியில் வெளியிடப்பட உள்ளது. வட்ட வடிவில் அந்த நாணயம் இருக்கும்.
இது சாதாரண மக்களின் பயன்பாட்டுக்கு அல்ல. அந்த நாணயத்தில் இந்திய நாட்டின் தேசிய மலரான தாமரை உருவமும், மகாத்மா காந்தியின் முழக்க வரிகளான ‘என் வாழ்க்கையே உங்களுக்கான அறிவுரை’ என்ற வரிகள் ஆங்கிலத்திலும் இடம்பெற்று இருக்கும்’’ என்றார்.
மகாத்மா காந்தியை பெருமைப்படுத்தும் வகையில் இங்கிலாந்து அரசு அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட இருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.