வேலைநிறுத்தத்திற்கு ஆதரவா? இன்று முடிவெடுக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்
நாடளாவிய ரீதியில் நாளை (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று முற்பகல் நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து சங்கத்தின் இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படவுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளே இந்தத் தீர்மானத்திற்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
குறிப்பாக, இரண்டு எரிபொருள் விநியோக நிறுவனங்களினால் வழங்கப்படும் கழிவு வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளமை, VAT அறவீட்டில் முறைகேடுகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றமை, தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் விநியோகிக்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
மேலும், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கமும் உரிய நிர்வாகத் தரப்பினரும் தலையிடத் தவறியுள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், நாளை முன்னெடுக்கப்படவுள்ள நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு எரிபொருள் விநியோகஸ்தர்களிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, சங்கத்தின் நிறைவேற்றுக் குழு மற்றும் ஏனைய அதிகாரிகள் பங்கேற்கும் இன்றைய கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.