குற்றங்களை ஒடுக்குவது மட்டும் போதாது; பொருளாதாரமும் பலப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி
குற்றங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மாத்திரம் சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், மக்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதும் அவசியம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (28) இலங்கையில் ஆரம்பமான உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, பௌத்த போதனைகளில் குற்றங்களை ஒடுக்குவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் மக்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளமை, பௌத்த தர்மம் எவ்வளவு நடைமுறைச் சாத்தியமானதும் காலத்திற்குப் பொருத்தமானதுமான தத்துவம் என்பதை எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
எந்தவொரு நாட்டினதும் ஸ்திரத்தன்மை அல்லது ஸ்திரமின்மை என்பது அந்த நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது.
ஆட்சியாளர் தர்மவழியில் நடப்பவராகவும் கொள்கைப்பற்றுடன் செயற்படுபவராகவும் இருந்தால் நாடு சுபீட்சத்தை நோக்கிப் பயணிக்கும்.
மாறாக, ஆட்சியாளர் ஊழல்வாதியாகவும் அதர்ம வழியில் செயற்படுபவராகவும் இருந்தால் முழு நாடும் அராஜக நிலைக்குத் தள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கோட்பாடு அனைத்து வகையான அரசுகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, பௌத்த தர்மம் நடைமுறைச் சாத்தியமானதும் எல்லாக் காலங்களுக்கும் பொருந்தக்கூடியதுமான தர்மமாக விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.
1966ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா, களனி நாகானந்த சர்வதேச பல்கலைக்கழகக் கேட்போர் கூடத்தில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் 50 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைத் தேரர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதனை முன்னிட்டு நாகானந்த ஆய்வு நிறுவனமும் திறந்து வைக்கப்பட்டதுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆண்டு நிறைவு விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 11 ஆவது பொதுச்சபையின் இரண்டாவது நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தொடர் உள்ளிட்ட பல்வேறு மத நிகழ்வுகள் டிசம்பர் 02ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளன.