இங்கிலாந்தில் இருந்து எஸ்வாட்டினிக்கு அனுப்பப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் தற்கொலை
பாலியல் துஷ்பிரயோகக் குற்றத்திற்காகத் தண்டனை பெற்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை, ஐக்கிய இராச்சியம் ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியிலுள்ள எஸ்வாட்டினி நாட்டிற்கு அனுப்பி வைத்தது.
இதனை தொடர்ந்து அந்த நாட்டிற்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில் அங்கு அவர் தற்கொலை செய்துகொண்டார்.
கிஷாந்த் பெரமால்யா, கனடாவை அடைந்து அங்கு புகலிடம் கோரும் நோக்கில் இந்தியாவிலிருந்து படகு மூலம் புறப்பட்ட குழுவில் ஒருவராக இருந்தார்.
2021 அக்டோபரில், அந்தப் படகு சிக்கலுக்குள்ளானபோது, பிரித்தானிய அரச கடற்படையினரால் மீட்கப்பட்டு, அமெரிக்க-பிரித்தானிய இராணுவத் தளம் அமைந்துள்ள, இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரித்தானியப் பிராந்தியமான டியாகோ கார்சியாவிற்கு (Diego Garcia) கொண்டு செல்லப்பட்டது.
டியாகோ கார்சியாவில் உள்ள முகாமின் மோசமான நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று வெளியானதைத் தொடர்ந்து, 2024 நவம்பரில், அங்கிருந்த 61 புலம்பெயர்ந்தோரை ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழைய அரசு அனுமதித்தது.
இருப்பினும், டியாகோ கார்சியாவில் இருந்த காலத்தில் நான்கு பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள், உடல் ரீதியான காயத்தை ஏற்படுத்திய தாக்குதல் மற்றும் தீவைப்புச் சம்பவம் உள்ளிட்ட குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றிருந்த பெரமால்யாவை, ஐக்கிய இராச்சியத்திற்குள் அனுமதிக்க அப்போதைய உள்துறைச் செயலாளர் இவெட் கூப்பர் மறுத்துவிட்டார்.
இலங்கையில் பதின்ம வயதினராக இருந்தபோது இராணுவத்தினரால் சித்திரவதைக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளான பெரமால்யாவிற்கு, மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
மார்ச் மாத இறுதியில், அவரை 30 நாட்களுக்குத் தங்களுக்கு அழைத்துக்கொள்ள மாலத்தீவு முன்வந்தது.
அதன்பிறகு, தென்னாப்பிரிக்கா மற்றும் மொசாம்பிக்கிற்கு இடையே நிலத்தால் சூழப்பட்ட நாடான (முன்பு சுவாசிலாந்து என்று அழைக்கப்பட்ட) எஸ்வாட்டினிக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவர் செப்டம்பர் 13 அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.