பாடசாலைகளில் புதிதாக இணையும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!
இலங்கையில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிதாக இணையும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமாகக் குறைவடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டில் 385,000 ஆகக் காணப்பட்ட புதிதாகப் பாடசாலைகளில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை, 2026ஆம் ஆண்டில் 251,000 ஆகக் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தத் தகவல்களை முன்வைத்துள்ளார்.
மேலும், இலங்கையிலிருந்து திறமையானவர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 2025ஆம் ஆண்டில் 290,000 பேரும், 2026ஆம் ஆண்டில் 271,000 பேரும் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக நேபாளம், பங்களாதேஷ், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வரவழைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வரவழைக்கப்படும் தொழிலாளர்களுக்கு 275,000 ரூபாய் முதல் 375,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுவதாகவும், இதன் காரணமாக வெளிநாட்டு நாணயம் நாட்டிலிருந்து வெளியேறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அதிகரித்த வாழ்க்கைச் செலவு காரணமாகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமையையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், போதிய தொழிலாளர் படை இல்லாத நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவதில் தயக்கம் காட்டக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சி, தொழிலாளர் வெளியேற்றம், உள்நாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான முன்மொழிவுகள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.