கனடாவில் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கனடாவில், தினமும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கனடாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, கனேடியர்களில் 5.7% பேர், அதாவது 1.8 மில்லியன் கனேடியர்கள் தினமும் கஞ்சா பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறது. தினமும் மது அருந்தும் கனேடியர்கள் எண்ணிக்கை 5.2% என கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வை தலைமையேற்று நடத்திய, போதைக்கு அடிமையானோர் ஆய்வு மையம் ஒன்றின் தலைவரான ஆண்ட்ரே மெக்டொனால்ட், அதிக அளவில் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வு சிகரெட் மற்றும் மதுபானம் அருந்துவோர் எண்ணிக்கை குறைந்துவருகிறது என்பதையும்தெரிவிக்கிறது.
அதாவது, புற்றுநோய் போன்ற அபாயங்கள் குறித்து அரசு மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களால், புகைபிடித்தல் குறைந்துவருவதுடன், மது அருந்துதலும் குறைந்துவருகிறது என்கின்றன ஆய்வு முடிவுகள்.