சிறுவர்களின் கருத்துக்களுக்கு அரச கொள்கைகளில் இடமளிக்க வேண்டும் – பிரதமர் ஹரிணி!
சிறுவர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்துடன் ஒத்துப்போவதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்துவது ஒட்டுமொத்த சமூகத்தினதும் கூட்டுப் பொறுப்பாகும் என்றும் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சிறுவர்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்ப்பது ஒரு நிகழ்வுடன் மட்டுப்படுத்தப்படாமல், அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குத் தொடர்ச்சியான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டும், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும் கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற “குட்டி அமாயாவும் நண்பர்களும்: இலங்கைக்கான ஒரு விருப்பம்” என்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாஷைகளை நாட்டின் சட்டவாக்கம், மேற்பார்வை, பிரதிநிதித்துவம் மற்றும் வரவு செலவுத் திட்டச் செயற்பாடுகளில் உள்வாங்குவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.
இதன்போது, சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் குரலுக்குப் பாராளுமன்றத்தில் வாய்ப்பளிப்பதற்கும் சிறுவர் பாராளுமன்ற ஒன்றியமொன்றை விரைவாக ஸ்தாபிக்க வேண்டுமென சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, சிறுவர்களின் தேவைகள் தேசியக் கொள்கைகள், சட்டவாக்கம் மற்றும் வரவு செலவுத் திட்டத் தீர்மானங்களில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சிறுவர், மகளிர் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் உள்ளடக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சிறுவர்கள் மற்றும் தாய்மார்களின் போஷாக்கின்மை பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முறையான அரச கொள்கை அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 55 சிறுவர் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பாராளுமன்றத்தில் முன்வைத்தனர்.
இதன்போது, 2036ஆம் ஆண்டில் இலங்கை எத்தகைய நாடாக இருக்க வேண்டும் மற்றும் சிறுவர்களுக்கு முக்கியமான விடயங்கள் எவை என்பதை அடிப்படையாகக் கொண்டு, ஏழு சிறுவர்கள் இணைந்து “இலங்கைக்கான ஒரு விருப்பம்” என்ற பிரகடனத்தையும் முன்வைத்தனர்.
சிறுவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாவிட்டாலும், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களும் வரவு செலவுத் திட்டத் தீர்மானங்களும் அவர்களின் வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதால், அவர்களுக்காகக் குரல்கொடுப்பது ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரினதும் பொறுப்பாகும் என UNICEF இலங்கைக்கான பதில் பிரதிநிதி பெகோனா அரெல்லானோ தெரிவித்துள்ளார்.
இலங்கையுடனான 80 ஆண்டுகால ஒத்துழைப்பைத் தொடர்ந்து பாராளுமன்றத்துடனான தொடர்புகளையும் மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், UNICEF அதிகாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்