யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்-21 பேர் கைது!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த நவம்பர் 19ஆம் திகதி இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியில் இடம்பெற்ற இந்த மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் காவல்துறையினர், மோதலில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 21 மாணவர்களைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மாணவர்கள் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மோதல் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே இடம்பெற்றிருந்தாலும், காவல்துறையினரின் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவித்துள்ளார்.
அத்துடன், மோதலுக்கான காரணங்கள் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தனியான உள்ளக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.