ஆறு பிரதி காவல்துறை மா அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம்!
நாட்டின் ஆறு பிரதி காவல்துறை மா அதிபர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன், காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் குறித்த இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, களுத்துறை மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த பிரதி காவல்துறை மா அதிபர் கேகாலை மாவட்டத்திற்கும், கேகாலை மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருந்தவர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த பிரதி காவல்துறை மா அதிபர் களுத்துறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், மத்திய குற்ற விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பிரதி காவல்துறை மா அதிபர் காவல்துறை நலன்புரிப் பிரிவுக்கும், காவல்துறை நலன்புரிப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர் மத்திய குற்ற விசாரணைப் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இடமாற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.