நிந்தவூரில் கடல் அலையில் சிக்கிய சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
அம்பாறை மாவட்டம், நிந்தவூரில் கடலில் நீராடிக்கொண்டிருந்த சிறுவர்களைக் காப்பாற்ற முற்பட்ட இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடலில் ஏற்பட்டிருந்த கடும் கொந்தளிப்புக்கு மத்தியில் இரண்டு சிறுவர்கள் நீராடிக்கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த பாரிய அலையில் அவர்கள் இருவரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனைக் கண்ட இளைஞர் ஒருவர், சிறுவர்களைக் காப்பாற்றும் நோக்கில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கடலில் குதித்துள்ளார்.
இதன்போது ஒரு சிறுவனைப் பாதுகாப்பாக மீட்ட அவர், மற்றைய சிறுவனையும் காப்பாற்றுவதற்காக மீண்டும் கடலுக்குள் சென்றுள்ளார். எனினும், துரதிர்ஷ்டவசமாக அவரும் கடலில் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தனது உயிரையும் பணயம் வைத்த இளைஞரின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடலில் கொந்தளிப்பு நிலவும் காலங்களில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கடலில் நீராடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
கடல் அபாய எச்சரிக்கைகளைப் புறக்கணிப்பது உயிராபத்துக்கு வழிவகுக்கும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகும்.