மின்னல் தாக்க அபாயம்: இலங்கையின் 25 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை – 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
இலங்கையின் பல பகுதிகளில் இன்று (28) இடியுடன் கூடிய பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 22 மாவட்டங்களுக்கு அம்பர் நிற எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில், வீடுகள் அல்லது பாதுகாப்பான கட்டடங்களுக்குள் இருக்குமாறும், மரங்களின் கீழ் நிற்பதையும் திறந்தவெளிப் பகுதிகளில் நடமாடுவதையும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், அறுந்து விழுந்த மின்சாரக் கம்பிகள் மற்றும் முறிந்து விழுந்த மரங்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (28) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.