People’s Pay செயலியில் பங்குச் சந்தை வர்த்தக வசதி – பீப்பிள்ஸ் பேங்க் புதிய அறிமுகம்
பீப்பிள்ஸ் பேங்க் மற்றும் லங்கா செக்யூரிட்டீஸ் (Lanka Securities) நிறுவனம் இணைந்து, வங்கியின் People’s Pay கையடக்கத் தொலைபேசி செயலியில் பங்குச் சந்தை வர்த்தக வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த அறிமுகத்தின் முக்கிய நிகழ்வாக, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தில் (CSE) சந்தை ஆரம்ப மணி ஒலிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இது பீப்பிள்ஸ் பேங்கின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்தப் புதிய வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரே செயலியில் வங்கிச் சேவைகள், முதலீட்டு முகாமைத்துவம் மற்றும் பங்குச் சந்தை வர்த்தகச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
People’s Pay செயலியின் ஊடாக வாடிக்கையாளர்கள் தமது வங்கிக் கணக்குகளுக்கும் மத்திய வைப்புத்தொகை முறைமை (CDS) கணக்குகளுக்கும் இடையில் பணத்தைப் பரிமாற்றம் செய்வதுடன், லங்கா செக்யூரிட்டீஸ் ஊடாகப் புதிய CDS கணக்குகளைத் திறக்கவும் முடியும்.
மேலும், வங்கிக் கணக்கு இருப்புடன் முதலீட்டுத் தொகுப்புகளைப் பார்வையிடவும் பங்குப் பரிவர்த்தனைகளை முகாமைத்துவம் செய்யவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பீப்பிள்ஸ் பேங்கின் தலைவர் சந்தன குணியங்கொட, டிஜிட்டல் மாற்றம் மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பங்களிப்பது வங்கியின் முக்கிய நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.
வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான கிளைவ் பொன்சேகா, இந்த ஒருங்கிணைப்பு வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியை வழங்குவதுடன், முதலீட்டு வாய்ப்புகளை இலகுவாக அணுகவும் உதவும் எனத் தெரிவித்தார்.
கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் தலைவர் திமுது அபேசேகர, இத்தகைய கூட்டாண்மைகள் மூலதனச் சந்தையில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிப்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் எனக் குறிப்பிட்டார்.
லங்கா செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கொசல கமகே, வங்கிச் சேவைகளையும் பங்குச் சந்தை வர்த்தகத்தையும் ஒரே டிஜிட்டல் தளத்தில் இணைப்பதன் மூலம் இலங்கையின் மூலதனச் சந்தையில் அதிகமானோர் பங்கேற்பதை ஊக்குவிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
இந்த முயற்சியானது பீப்பிள்ஸ் பேங்கின் டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்துவதுடன், வாடிக்கையாளர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகள் மூலம் முதலீடுகளை நிர்வகிப்பதற்கும் பங்குச் சந்தையை அணுகுவதற்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.