இறைச்சிக்காக 2,700 பூனைகளைத் திருடிய 12 பேர் கைது
வியட்நாமின் ஹோ சி மின் நகரில், இறைச்சிக்காக சுமார் 2,700 பூனைகளைத் திருடி மறுவிற்பனை செய்யும் கும்பலை நடத்தியதாகக் கூறப்படும் 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விசாரணையின் போது பூனைகளைப் பிடிக்கும் பொறிகள், ரோமத்தை அகற்றும் இயந்திரங்கள் மற்றும் எடை பார்க்கும் கருவிகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் சிறிய குழுக்களாக குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று, உணவுக்காகக் கொல்லப்படவிருந்த பூனைகளைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
39 வயதான லு தான் பின் (Luu Thanh Binh) என்பவர் இந்தக் கும்பலின் தலைவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
லு தான் பின் மற்றும் அவருடன் இருந்த 11 பேர் மீது சொத்துத் திருட்டு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
பூனைகள் வளர்க்கப்படும் வீடுகளுக்கு வெளியே பொறிகளை வைத்து, மீன் துண்டுகளை இரையாகப் பயன்படுத்தி இவர்கள் பூனைகளைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு குழுவும் ஒரு இரவில் நான்கு முதல் 10 பூனைகள் வரை திருடியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.