சிவலிங்கத்தை அவமதித்தவர் வீட்டில்; அனோஜன் சிறையில் - சிறீதரன் ஆவேசம்!
சிவலிங்கத்தை கீழ்த்தரமாக எழுதியவர் வீட்டில் இருக்கப் போகிறார், அல்லாஹ்வை கீழ்த்தரமாக பதில் எழுதிய அனோஜனுக்கு தலை துண்டிக்கப்பட போகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிவஞானம் சிறீதரன் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும், நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கும் போது அனோஜனுடைய தலையை துண்டிப்பதை பற்றி ஒரு நாடு சிந்தித்துக் கொண்டிருக்கிறது.
எங்களோடு பிறந்த ஒரு மனிதன், உங்களுடைய சகோதரன் உயிரோடு வருவானா அல்லது அவனது உடல் தான் வருமா நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்ற சிக்கல் நீடிக்கிறது.
நேற்று காலை கூட அமைச்சர் விஜித ஹேரத்துடன் பேசியிருந்தேன். ஜனாதிபதியினுடைய செயலாளரோடும் போசியிருந்தேன். இந்த விடயம் தொடர்பில் உங்களது அதீத கவனமும் அந்த உயிரை காப்பாற்றுகின்ற விடயமும் ஒரு அரசுக்குரியது.
யாரோ ஒருவர் ஊர்வலம் போகும்போது நாயைக் கொண்டு போனார்கள். அதற்கு சுப்பிரமணி என பெயரையும் வைத்து விட்டார்கள். தெருவில் நின்ற ஒருவர் அதனை காலால் தட்டி விட்டார்.
அதனை எங்களுடைய ஆட்களே பெரிதுபடுத்தினார்கள். அதற்கு நிறைய விமர்சனங்களை எழுதினார்கள். இந்த நிலையில் அந்த மார்க்கத்தை சேர்ந்த ஒருவர் சிவலிங்கத்தை கீழ்த்தரமாக எழுதினார்.
பொறுக்க முடியாத அனோஜன் அல்லாஹ்வை பற்றி கீழ்த்தரமாக எழுதினார். இரண்டுமே பொருத்தமில்லாத ஒன்று தான். எழுதக்கூடாது தான்.
ஆனால் அவர் எழுதினார். இவர் பதில் எழுதினார். இவருக்கு தலை போகிறது. ஆனால் அவர் வீட்டில் இருக்கப்போகிறார். அனோஜனின் பதிவை மொழி பெயர்த்து கொடுத்தவர் ஒரு தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்தவர்.
அனோஜனுக்கு தண்டனை கிடைப்பதற்கு காரணம் இலங்கையில் இருக்கின்ற தமிழ் பேசுகின்ற இந்த சகோதரர்கள் தான் என குறிப்பிட்டுள்ளார்.