சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்ட கஜேந்திரகுமார் எம்பி

#SriLanka #Jaffna #Hospital #Lanka4 #Visit #Gajenthirakumar #L4
Prasu
1 month ago
சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்ட கஜேந்திரகுமார் எம்பி

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு நேரில் சென்று, அங்குள்ள தேவைப்பாடுகள், குறைபாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டார். ​

மருத்துவமனையின் தற்போதைய நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் மருத்துவமனையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். ​

மருத்துவமனைக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினரை நிர்வாகத்தினர் வரவேற்றதுடன், பல்வேறு பிரிவுகளுக்கும் அவரை அழைத்துச் சென்று தற்போதைய செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர். ​

குறிப்பாக வெளிநோயாளர் பிரிவு (OPD), தங்கி சிகிச்சை பெறும் விடுதிகள், அவசர சிகிச்சை பிரிவு பிரசவ விடுதி, விபத்து அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். ​

மருத்துவமனையில் பணியாற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் தாதியர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும் கேட்டறிந்தார். ​

images/content-image/1779993917.jpg

ஆய்வினைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாக அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன: ​கட்டமைப்பு மற்றும் பௌதீகக் குறைபாடுகள்: மருத்துவமனையின் தற்போதைய கட்டிடத் தொகுதித் தேவைகள், விடுதிகளின் கொள்ளளவு பற்றாக்குறை மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களின் அவசியம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

ஆனால் அவை எல்லாவற்றையும் விட​ மருத்துவர்கள், தாதிகள் மற்றும் ஏனைய சிற்றூழியர்கள் போன்றோரின் ஆளணி பற்றாக்குறை காரணமாக ஏற்படும் பணிச்சுமை மற்றும் சேவைகளில் ஏற்படும் தாமதங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. ​

தென்மராட்சிப் பகுதி மக்களின் பிரதான மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் இந்த ஆதார மருத்துவமனையை, அடுத்த கட்டத்திற்கு தரம் உயர்த்துவதற்குத் தேவையான நீண்டகால அபிவிருத்தி வரைபடம் (Development Master Plan) குறித்து நலன்புரிச் சங்க உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது. 

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள ஆதார மருத்துவமனைகள் வளப் பங்கீட்டின் போது சாவகச்சேரி ஆதார மருத்துவமனை பின்தங்கி உள்ளது என்பதை குறிப்பிட்டு இருந்தார்கள். ​

கலந்துரையாடலின் நிறைவில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் தற்போதைய மனிதவளக் குறைபாடுகள் மற்றும் ஏனைய அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் வியைவாக நிவர்த்தி செய்யப்பட வேண்டியவை என்பதை தங்களின் கோரிக்கைகள் மூலம் முழுமையாக புரிந்து கொள்கின்றேன். 

இங்குள்ள தேவைகள் மற்றும் குறைபாடுகள் அனைத்தையும் அறிக்கையாகத் தொகுத்து எனக்கு சமர்ப்பியுங்கள் அதன் அடிப்படையில், நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், உரிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஊடாக இதற்கான தீர்வையும் பெற்றுத்தர முழுமையான அழுத்தங்களைப் பிரயோகிப்பேன் என உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4