அகதிகளைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் - பிரிட்டன் இணக்கம்: 766 மில்லியன் யூரோக்கள் முதலீட்டில் புதிய ஒப்பந்தம்!
பிரிட்டனுக்குச் செல்லும் நோக்கில் சிறிய படகுகள் மூலம் பிரான்ஸ் கடற்கரையிலிருந்து ஆபத்தான முறையில் கடலைக் கடக்கும் அகதிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் மீண்டும் கைகோர்த்துள்ளன.
இந்த புதிய மூன்று ஆண்டு காலத் திட்டத்திற்காக பிரிட்டன் சுமார் 766 மில்லியன் யூரோக்கள் வழங்கவுள்ளது. இதில் ஒரு சுவாரசியமான அம்சம் என்னவெனில்: மொத்தத் தொகையில் 186 மில்லியன் யூரோக்கள் நேரடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் வெற்றியைக் கொண்டே வழங்கப்படும்.
அதாவது, ஊடுருவல்கள் எந்தளவுக்குக் குறைகிறதோ, அதற்கேற்பவே பிரிட்டன் இந்த நிதியை வழங்கும். "வேலை நடந்தால் மட்டுமே பணம்" என்ற கறாரான அணுகுமுறையை முதன்முறையாகப் பிரிட்டன் கையாண்டுள்ளது.
சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கப் பிரெஞ்சு கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி 2029-ஆம் ஆண்டிற்குள் கடற்கரைப் பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை 1,400 ஆக உயர்த்தப்படும்.
ஆளில்லா விமானங்கள் (Drones), ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன மின்னணுத் திரைகள் மூலம் கடற்கரை முழுமையாகக் கண்காணிக்கப்படும். பிரான்சால் நிதியளிக்கப்படும் ஒரு பிரத்யேக 'சி.ஆர்.எஸ்' (CRS) படைப்பிரிவு, குறிப்பாக இந்தச் சட்டவிரோதப் படகுப் பயணங்களைத் தடுக்க உருவாக்கப்படும்.
இந்த புதிய ஒப்பந்தத்திற்கு முக்கியக் காரணம் கடந்த 2025-ஆம் ஆண்டில் நிலவிய மிக மோசமான சூழலாகும்: கடந்த ஆண்டில் மட்டும் குறைந்தது 29 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 2025-இல் சுமார் 41,472 பேர் சிறு படகுகள் மூலம் பிரிட்டனைச் சென்றடைந்துள்ளனர்.
இது 2018-க்குப் பிறகு பதிவான இரண்டாவது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். கடற்கரையில் உள்ள சோதனைகளைத் தவிர்க்க, கடலின் நடுவே நேரடியாக மக்களை ஏற்றிச் செல்லும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
சர்வதேசக் கடல் சட்டங்களின்படி, ஒரு படகு கடலுக்குள் சென்றுவிட்டால், அதில் இருப்பவர்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருந்தால் மட்டுமே அதிகாரிகளால் தலையிட முடியும் என்பது ஒரு பெரும் சிக்கலாக இருந்து வருகிறது.
இதனை முறியடிக்கவே இத்தகைய நவீனக் கண்காணிப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன.
செய்திகள்
சிவா சின்னப்பொடி பிரான்ஸ்
(வீடியோ இங்கே )