"பூநகரி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம். சிறீதரன் எம்.பி வலியுறுத்தல்...!
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு மற்றும் பொன்னாவெளி பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அண்மையில் கள விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார்.
குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர், காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டதுடன், அங்குள்ள பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள 34 காற்றாலைகளில், சுமார் 9 காற்றாலைகள் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளிலும், செழிப்பான தென்னந்தோப்புக் காணிகளிலும் அமைக்கப்படவுள்ளன.
இதனால் சுமார் 2,500க்கும் மேற்பட்ட காய்க்கும் தென்னை மரங்கள் அழிக்கப்படவுள்ளதோடு, மக்களின் வாழ்வாதாரமும் இருப்பிடமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
"அரசினால் மேற்கொள்ளப்படும் காற்றாலைத் திட்டத்திற்கு நாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால், இத்திட்டம் எமது வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையிலும், குடியிருப்புகள் இல்லாத தரிசு நிலங்களில் மேற்கொள்ளப்படுவதையுமே நாம் விரும்புகிறோம்.
இந்த நிலம் எமது பூர்வீக நிலம்; எமது வாழ்வியலும் பொருளாதாரமும் இந்த மண்ணோடு பிணைந்துள்ளது.
எனவே, இதற்கு மாற்றாக வேறு காணிகளையோ அல்லது நட்ட ஈட்டையோ பெறுவதற்கு நாம் தயாரில்லை" என மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்