வடக்கின் இதயமாக மாறுகின்றது மாங்குளம் 10 ஆண்டுகால அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்!

#SriLanka #Development #North #Heart #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
வடக்கின் இதயமாக மாறுகின்றது மாங்குளம் 10 ஆண்டுகால அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்!

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வடக்கின் மையமாக மாங்குளத்தைக் கட்டியெழுப்புவோம் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி அதிகார சபையால் புதுக்குடியிருப்பு, மாந்தை கிழக்கு மற்றும் வவுனியா வடக்கு ஆகிய பிரதேச சபைகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் மாங்குளம் நகர அபிவிருத்தித் திட்டத்தின் (2026 – 2036) உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வும், முதலாவது பங்குதாரர்கள் கூட்டமும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், எமக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் நாம் உரிய முறையில் பயன்படுத்தி, மாகாணத்தின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவை மீண்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே என்று குறிப்பிட்ட ஆளுநர், எமக்குத் தேவையானவற்றை நாமே கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

"நான் முல்லைத்தீவு மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலத்தில், மாங்குளத்தை வடக்கு மாகாணத்தின் மையமாக அடையாளப்படுத்தி அதற்கான நிலப்பரப்புகளும் ஒதுக்கப்பட்டன. எனினும், அத்திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

போரின் பின்னர், ஏ-9 பிரதான வீதியில் அமைந்துள்ள மாங்குளம் நகரம் வலுவிழந்த நிலையில் காணப்படுவது கவலைக்குரியது. அதனை மாற்றியமைத்து, நகரத்தை மீளக் கட்டியெழுப்பும் பெரும் முயற்சியின் ஒரு வெளிப்பாடாகவே இத்திட்டம் அமைந்துள்ளது." என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி இயங்கும் வடக்கு மாகாண சபையின் பல திணைக்களங்களை, படிப்படியாக மாங்குளத்தை நோக்கி நகர்த்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் இதன்போது வெளிப்படுத்தினார்.

வடக்கு மாகாணம் வளங்கள் நிறைந்ததாக இருந்தும், வறுமை நிலையில் முன்னிலையில் உள்ள முரண்பாட்டைத் தகர்க்க, நகர அபிவிருத்தி அதிகார சபையின் இத்திட்டம் பெரும் உறுதுணையாக அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்ட அவர், தமது கோரிக்கைக்கு அமைவாக இந்தக் கூட்டத்தை விரைவாக ஏற்பாடு செய்த நகர அபிவிருத்தி அதிகார சபையினருக்குத் தனது விசேட நன்றிகளையும் தெரிவித்தார்.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் வரவேற்புரையாற்றிய நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் திஸாநாயக்க, எதிர்வரும் 10 ஆண்டுகாலத் திட்டத்தைத் தயாரிக்கும் இம்முதலாவது கூட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் தொடர்ச்சியான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர், கடந்த ஆண்டு சபையைப் பொறுப்பேற்றதன் பின்னர் ஆளுநருடன் இணைந்து மாங்குளம் நகரத்துக்கு மேற்கொண்ட களப் பயணத்தின் தொடர்ச்சியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை வரவேற்றதுடன், அங்குள்ள பஸ் நிலையத்தை மீள இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில், மாங்குளம் நகர அபிவிருத்தித் திட்டத்துக்குள் தமது சபைக்குட்பட்ட நான்கு கிராமங்களும் உள்வாங்கப்பட்டுள்ளமையால், அக்கிராமங்களின் வளர்ச்சிக்கு இத்திட்டம் பெரும் வாய்ப்பாக அமையும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

அதேபோன்று, வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளரும், போரால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள தமது பிரதேச சபையின் நான்கு வட்டாரங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளமையை வரவேற்று, பிரதேசத்தின் வளர்ச்சிக்கான தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

பின்னர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் திருமதி கவிதா ஜீவகன், மாங்குளம் நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான முழுமையான தொழில்நுட்ப விளக்கங்களை வழங்கினார்.

அனைத்துப் பங்குதாரர்கள் மத்தியிலும் அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், திட்டமிடல் குழு, பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கிடையில் நெருக்கமான ஒத்துழைப்பை வளர்த்தல், எவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற தொலைநோக்குக் கருத்துக்களைப் பெறுதல், தற்போதைய சாத்தியக்கூறுகள் மற்றும் பிரச்சினைகளை அடையாளம் காணுதல் மற்றும் எதிர்கால அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்த ஆரம்ப யோசனைகளைச் சேகரித்தல் ஆகிய உயரிய இலக்குகளை மையமாகக் கொண்டே இன்றைய கூட்டம் அமைந்திருந்தது.

இந்நிகழ்வில், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், செயலாளர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கொழும்பு தலைமைப் பணிமனை மற்றும் வடக்கு மாகாணப் பணிமனை அதிகாரிகள், ஏனைய தொடர்புடைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4