பிரான்சில் Agirc-Arrco ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான முக்கிய தகவல்
பிரான்சில் Agirc-Arrco ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, ஜனவரி 2026 முதல் அவர்கள் கைக்குக் கிடைக்கும் தொகையில் ஏற்றமோ அல்லது இறக்கமோ ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கான விவரங்கள் இதோ:
1. ஏன் இந்த மாற்றம்?
உங்கள் ஓய்வூதியத்திலிருந்து CSG, CRDS, CASA போன்ற சமூகப் பிடித்தங்கள் (Prélèvements sociaux) கழிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம், இந்தப் பிடித்த விகிதங்கள் (Taux de prélèvement) புதுப்பிக்கப்படும். இந்தக் கணக்கீடு உங்கள் வரி விதிப்பு அறிவிப்பை (Avis d’imposition) அடிப்படையாகக் கொண்டது.
குறிப்பாக, 2024ம் ஆண்டின் வருமானத்தைப் பொறுத்தே 2026ம் ஆண்டிற்கான பிடித்த விகிதம் அமையும்.
2. ஓய்வூதியம் குறையுமா? கூடுமா?
2024ம் ஆண்டில் உங்கள் வருமானம் உயர்ந்திருந்து, அதனால் நீங்கள் உயர் வரம்பிற்குள் (Tranche supérieure) சென்றிருந்தால், உங்கள் ஓய்வூதியத்தில் அதிகப் பிடித்தம் செய்யப்படும். இதனால் கைக்கு வரும் தொகை குறையலாம்.
மாறாக, 2024ல் உங்கள் வருமானம் குறைந்திருந்தாலோ, அல்லது திருமணம்/துணையின் ஓய்வு காரணமாகக் குடும்பத்தின் வரிக்குரிய வருமானம்(Revenu fiscal de référence - RFR) குறைந்திருந்தாலோ, பிடித்தம் குறைக்கப்பட்டு உங்கள் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கலாம்.
குறிப்பு: இந்த மாற்றங்கள் அனைத்தும் தானாகவே (Automatiquement) நடைபெறும். நீங்கள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.
3. புதிய வரம்புகள் (Seuils)
CFDT தொழிற்சங்கத்தின் மதிப்பீட்டின்படி, பணவீக்கத்திற்கு ஏற்ப வரி வரம்புகள் 1.8% உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. 2026ம் ஆண்டிற்கான ஓய்வூதியம் வழங்கும் திகதிகள்
Agirc-Arrco ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளில் (Premier jour ouvré) வழங்கப்படும். 2026ம் ஆண்டிற்கான அட்டவணை:
- ஜனவரி: 2 ஜனவரி(வெள்ளி)
- பிப்ரவரி: 2 பிப்ரவரி(திங்கள்)
- மார்ச்: 2 மார்ச்(திங்கள்)
- ஏப்ரல்: 1 ஏப்ரல்(புதன்)
- மே: 4 மே(திங்கள்)
- ஜூன்: 1 ஜூன்(திங்கள்)
- ஜூலை: 1 ஜூலை(புதன்)
- ஆகஸ்ட்: 3 ஆகஸ்ட்(திங்கள்)
- செப்டம்பர்: 1 செப்டம்பர்(செவ்வாய்)
- அக்டோபர்: 1 அக்டோபர்(வியாழன்)
- நவம்பர்: 2 நவம்பர்(திங்கள்)
- டிசம்பர்: 1 டிசம்பர்(செவ்வாய்)
(செய்தி ஆக்கம்-சிவா சின்னப்பொடி)
(வீடியோ இங்கே )