மக்களே! அவதானம் அவதானம். இது SMS! உலகளாவிய ரீதியில் நடக்கும் மோசடி
பிரான்சில் வசிக்கும் , உங்களுக்குப் போக்குவரத்து விதிமீறல் அபராதம் (amende) செலுத்தச் சொல்லி SMS அல்லது இ-மெயில் வருகிறதா? உடனடியாகப் பணம் செலுத்தாவிட்டால் அபராதம் கூடிவிடும் என்று மிரட்டப்படுகிறீர்களா? ஜாக்கிரதை!
இது ANTAI (தேசிய தானியங்கி குற்றங்கள் செயலாக்க நிறுவனம்) பெயரில் நடக்கும் ஒரு பெரிய ஒன்லைன் மோசடியாக இருக்கலாம். இந்த மோசடி மீண்டும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். குற்றவாளிகள் "ஸ்மிஷிங்" (SMS மூலம் ஹேக்கிங்) மற்றும் "ஃபிஷிங்" (இ-மெயில் மூலம் ஹேக்கிங்) நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர்.
அவசரச் செய்தி: "நீங்கள் போக்குவரத்து அபராதத்தை தாமதமாகச் செலுத்துகிறீர்கள். அபராதம் அதிகரிக்கப்படுவதற்கு முன்பு உடனடியாகச் செலுத்துங்கள்" என்று ஒரு SMS அல்லது இ-மெயில் வரும்.
நம்பகத்தன்மை: உங்களை நம்ப வைப்பதற்காக, அதிகாரப்பூர்வ ANTAI லோகோ மற்றும் அரசு பயன்படுத்துவது போன்ற கண்டிப்பான, அவசரப்படுத்தும் தொனியைப் பயன்படுத்துகின்றனர். போலி வலைத்தளம்:
அந்தச் செய்தியில் ஒரு லிங்க் (link) இருக்கும். அதைக் கிளிக் செய்தால், அது பார்ப்பதற்கு அசல் அரசு வலைத்தளம் (amendes.gouv.fr) போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு போலித் தளத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும். தகவல் திருட்டு: அங்கே நீங்கள் உங்கள் அபராதத்தைச் செலுத்துவதாக நினைத்து, உங்கள் வங்கி விவரங்கள் (Bank details) மற்றும் தனிப்பட்ட தகவல்களை (Personal data) உள்ளிடும்போது, அவை அனைத்தும் மோசடியாளர்களால் திருடப்படுகின்றன. இந்தத் தகவல்கள் பின்னர் விற்கப்படுகின்றன.
இந்த மோசடியாளர்களிடம் சிக்காமல் இருக்க சில எளிய விதிகளை நினைவில் கொள்ளுங்கள்:
முக்கிய விதி (SMS): ANTAI நிறுவனம் அபராதம் செலுத்தக் கோரி ஒருபோதும் SMS அனுப்புவதில்லை. எனவே, SMS மூலம் வரும் எந்தவொரு அபராதச் செய்தியும் 100% போலியானது. செய்ய வேண்டியது (SMS): அந்த SMS-ல் உள்ள லிங்கை கிளிக் செய்யாதீர்கள்.
அதற்குப் பதிலளிக்காதீர்கள். உடனடியாக அந்தச் செய்தியை நீக்கிவிடுங்கள். (பிரான்சில், நீங்கள் அதை 33700 என்ற எண்ணுக்கு இலவசமாக ஃபோர்வர்டு செய்வதன் மூலம் புகாரளிக்கலாம்).
இ-மெயில் சரிபார்ப்பு: உங்களுக்கு இ-மெயில் வந்தால், முதலில் அனுப்பியவரின் முகவரியை (sender's address) சரிபார்க்கவும்.
ஒரே அதிகாரப்பூர்வ முகவரி: nepasrepondre_noreply@antai.gouv.fr என்பது மட்டுமே ANTAI-ன் உண்மையான இ-மெயில் முகவரியாகும். வேறு எந்த முகவரியிலிருந்து வந்தாலும் அது போலியானது.
சரியான வழி: உங்களுக்கு உங்கள்மீது அபராதம் உள்ளதா என்ற சந்தேகம் இருந்தால், செய்தியில் வரும் லிங்கை கிளிக் செய்யாதீர்கள்.
அதற்குப் பதிலாக, நீங்களே உங்கள் இணைய பிரவுசரில் (browser) பின்வரும் அதிகாரப்பூர்வ தளங்களுக்குச் சென்று சரிபார்க்கவும்:
அபராதம் செலுத்த: www.amendes.gouv.fr பார்க்கிங் அபராதம் செலுத்த: www.stationnement.gouv.fr உங்கள் அபராத நிலையைச் சரிபார்க்க: www.antai.gouv.fr
ஒருவேளை ஏமாந்துவிட்டால் என்ன செய்வது? தவறுதலாக உங்கள் வங்கி விவரங்களை அளித்துவிட்டால், ஒரு நொடியும் தாமதிக்க வேண்டாம்:
உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு உங்கள் கார்டை முடக்க (block)ச் சொல்லுங்கள். அருகில் உள்ள காவல் நிலையத்தில் (Gendarmerie அல்லது Police) புகார் அளியுங்கள்.
இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்துகொண்டு, அவர்களையும் இந்த மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்க உதவுங்கள்.
-சிவா சின்னப்பொடி.-
(வீடியோ இங்கே )
அனுசரணை
