சிறப்புற நடைபெற்ற பூநகரி பிரதேச பண்பாட்டு பெருவிழா - 2025!

பூநகரி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் மற்றும் பூநகரி பிரதேச கலாசாரப் பேரவை இணைந்து நடாத்தும் பண்பாட்டு விழா நேற்று(20.08.2025) புதன்கிழமை பி.ப 1.00 மணிக்கு நடைபெற்றது. குறித்த முழங்காவில் விநாயகர் கலையரங்கில், பூநகரி பிரதேச செயலாளரும் பண்பாட்டு பேரவையின் தலைவருமான வே.ஆயகுலன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்டம் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக முழங்காவில் மகா வித்தியாலய அதிபர் பா. சிவானந்தி அவர்களும், கிளிநொச்சி மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் கி.மாலினி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அமரர் கலாபூஷனம் அடைக்கலம் வேதநாயகம் அவர்களின் ஞாபகார்த்த அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது குறித்த பிரதேசத்தின் பல்வேறுபட்ட கலை, கலாசார, பண்பாட்டு மற்றும் இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. முழங்காவில் 19ம் கட்டைச் சந்தியிலிருந்து பூநகரி பிரதேசத்தின் பல்வேறு தொழில் முனைவோர்கள் மற்றும் பண்பாட்டு கலை கலாசார அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய வாகன ஊர்த்திகளுடன் பல்வேறு கிராமிய நடனங்களுடன் விருந்தினர்கள் அரங்க வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
விருந்தினர் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு, நாச்சிக்குடா நெய்தல் கலாமன்றத்தினால் தமிழ்தாய் வாழ்த்தும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பிரதேச கலாசாரப் பேரவைக் கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து, அரங்கத் திறப்புரையினை பூநகரி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் காசிநாதன் நிருபா நிகழ்த்தினார். ஆசியுரைகளைத் தொடர்ந்து வரவேற்புரையினை பூநகரி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பா.கிரியா நிகழ்த்தினார். நிகழ்வில் கலாமன்றங்களினால் வரவேற்பு நடனம், பல்லியம், சிவகீர்த்தனை, கிராமிய நடனம், கிராமிய பாடல், முஸ்லீம் நடனம், நாட்டிய நிருத்திய நடனம், விநாயகர் துதி நடனம், கிராமிய கதம்பம், நடனம், கஞ்சன் நாடகம், நாட்டிய நாடகம் முதலான நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன. மேலும் 2025ம் ஆண்டுக்கான கலைநகரி மற்றும் இளங்கலைஞர் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மதகுருக்கள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட செயலக மற்றும் பூநகரி பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச பிரிவிற்குட்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள், பாடசாலை மற்றும் முன்பள்ளி சமூகத்தினர், கலைஞர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், அனுசரணையாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
பூநகரி பிரதேச பிரதேச பண்பாட்டு பெருவிழாவானது வருடாந்தம் ஒவ்வொரு கிராமங்களை நோக்கி நகர்த்தப்பட்டுவருகின்ற நிலையில் இவ்வாண்டு முழங்காவிலில் சிறப்புற நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



