சித் ரூ- 2025 நிகழ்வில் சாதனை படைத்த வெற்றியாளர்கள் கெளரவிப்பு!
மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "சித் ரூ-2025" கலை நிகழ்ச்சி கடந்த 05 ம் திகதி கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கலாச்சார சித் ரூ- 2025 நிகழ்வில் குழு நடனத்தில் கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்றுச் சாதனை படைத்தது. அந்தவகையில் சாதனையாளர்களையும் சாதனைக்கு முன்னின்று உழைத்த ஆசிரியர் மற்றும் ஒப்பனைக்கலைஞர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டுமண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சாதனையாளர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்,மேலதிக அரசாங்க அதிபர்(காணி) உட்பட மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் அனுசரனையாளர்கள்,ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் அனுசரனையினை குரு காட்வெயார் நிறுவனம் வழங்கியிருந்தது.
இலங்கை முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "ஒன்றாக - கைவிடாத" என்ற தேசிய கொள்கைக்கு இணங்க, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் பங்கேற்பவர்களாகவும் பெருமைமிக்க பிரஜைகளாகவும், வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த சமூக சேவைகள் திணைக்களம் அதன் ஒரு மூலோபாயங்களில் ஒன்றாக "சித் ரூ" கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது.
மாற்றுத்திறனாளிகளின் புனர்வாழ்வு, வலுப்படுத்தல் மற்றும் பாதுகாப்புக்காக சமூக சேவைகள் திணைக்களத்திற்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 632 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
                        
                    
                        
                    
                        
                    
                        
                    
                
                
                
                
                
                                    