ரோபோ போன்று பிள்ளைகளை உருவாக்க வேண்டுமா? ஜனாதிபதி ஆவேசம்

பிள்ளைகளுக்கு சிறுவர் வாழ்க்கையை அனுபவிக்கக்கூடியவாறும், அவர்கள் 13 வருட கட்டாய கல்வியுடன் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கக்கூடியவாறும் கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும். ரோபோ போன்று பிள்ளைகளை உருவாக்க முடியாது.
அதனை மாற்றி அமைக்க வேண்டும். அதேபோன்று அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை உருவாக்கக்கூடியவாறு சிறந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளக்கூடிய வகையில் மறுசீரமைப்புகள் இடம்பெறும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
தற்போதைய கல்வி முறைமையும் அதன்மூலம் உருவாகியுள்ள இளைஞர் சந்ததி தொடர்பிலும் அதேபோன்று இந்த கல்வி முறைமையால் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் தொடர்பிலும் எவருக்கும் திருப்தியடைய முடியாது. இதனால் எமக்கு மிகவும் பரந்துபட்ட கல்வி மறுசீரமைப்பு அவசியமாகும். இந்த கல்வி மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் போது பலரும் பாட விதானங்கள் தொடர்பில் கதைக்க ஆரம்பித்துள்ளனர்.
வரலாறு உள்ளடக்கப்படுமா? இல்லையா? என்றும் கலந்துரையாடினர். ஆனால் இது பாடத்திட்டங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்ட திருத்தமாக இந்த யோசனைத் திட்டம் இருக்காது. எமது முழு சமூகம், பொருளாதாரம் மற்றும் எமது நாட்டை புதிய மாற்றத்திற்கு கொண்டு செல்லும் மறுசீரமைப்பாக அமையும். இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக எம்மிடம் இருக்கும் முக்கிய வளமாக மனித வளங்களே உள்ளன. இதனால் இந்த மனித வளத்தை பலப்படுத்தி எவ்வாறு நாட்டை புதிய நிலைக்கு கொண்டு செல்வது என்றே பார்க்கின்றோம். வறுமை நிலையில் இருந்து மீட்கவும், குற்றங்களை குறைக்கவும் கல்வி முக்கியமானது. இந்த மாற்றத்தின் ஆரம்பம் கல்வியாகும்.
இதனாலேயே எமது கொளகை பிரகடனத்தில் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் குறிப்பிட்டுள்ளோம். முதலாவதாக கல்வியில் இருக்கும் பிரச்சினைகளை அடையாளம் காண வேண்டும். இல்லாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் பிரயோசனமில்லை. இந்த நேரத்தில் கல்வித்துறை முகம்கொடுத்துள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.
இதில் பிள்ளைகள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுவது ஒரு நெருக்கடியாக உள்ளது. 2019ஆம் ஆண்டில் 16,673 பேர் இடை விலகியுள்ளனர். அதேபோன்று 2021ஆம் ஆண்டில் 20,759 பேரும் 2024ஆம் ஆண்டில் 20,755 பேரும் இடைவிலகியுள்ளனர். இவர்கள் படிக்க வேண்டிய காலம் இருந்தும் பாடசாலைகளை விட்டுச் சென்றுள்ளனர். இதனால் 13 வருடங்கள் கல்வியை பெறாமல் பாடசாலைகளை விட்டுச் செல்லக்கூடாது. அதாவது 2006ஆம் ஆண்டில் பிறந்த பிள்ளை 2011ஆம் ஆண்டில் பாடசாலையில் சேர்கிறது.
அதன்படி 358,596 பேர் பாடசாலையில் சேர்வதுடன், அவர்கள் 2021ஆம் ஆண்டிலேயே சாதாரண தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்க வேண்டும். ஆனால் 311,000 பேரே அந்தப் பரீட்சைக்கு முகம்கொடுக்கின்றனர். இதன்படி 47,000 பேர் வரையிலானோர் பரீட்சைக்கு முன்னரே இடை விலகியுள்ளனர். இவ்வாறான நிலைமையில் கல்வி மறுசீரமைப்பு அவசியமாகும்.
13 வருட கல்வியை கட்டாயமாக்கி இந்த பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும். எந்தவொரு பிள்ளையும் பாடசாலையில் இருந்து இடைவிலகிவிடக்கூடாது. நாங்கள் கல்வி திட்டங்களை முன்னெடுப்பதுடன், 3 நாட்கள் அந்தப் பிள்ளை தொடர்ச்சியாக பாடசாலைக்கு வரவிட்டால் அரச அதிகாரி அந்தப் பிள்ளை தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டும். அத்துடன் பாடசாலைகளில் உள்ள மாணவர் எண்ணிக்கை தொடர்பில் கூறும் போது 2023ஆம் ஆண்டில் ஒரு மாணவரும் சேர்க்கப்படாத 98 பாடசாலைகள் உள்ளன. அத்துடன் 10 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையுடைய 115 பாடசாலைகள் உள்ளன. 20 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையுடைய 406 பாடசாலைகளும் 30 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையுடைய 752 பாடசாலைகளும் 50க்கும் குறைவான மாணவர்களை கொண்ட 1506 பாடசாலைளும் உள்ளன. இதனால் முழு பாடசாலை கட்டமைப்பில் 15 வீதமானவை 50க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ளது.
100 மாணவர்களை விடவும் குறைவான எண்ணிக்கை கொண்ட 3144 பாடசாலைகள் உள்ளன. இதன்படி அரச பாடசாலைகளில் மூன்றில் ஒரு பங்கு நூற்றுக்கும் குறைவான மாணவர்களே உள்ளன. இதனால் பாடசாலை கட்டமைப்புகள் தொடர்பில் மீளாய்வு செய்ய வேண்டும். இந்த தீர்மானத்தை நாங்கள் நிச்சயம் எடுப்போம். சில பாடசாலைகளை மூட வேண்டும்.
சில பாடசாலைகளை இணைக்க வேண்டும். சில இடங்களில் புதிதாக பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. கிராமபுறங்களில், சமூக பின்னடைவு உள்ள பகுதிகளை சேர்ந்த பிள்ளைகளே இவ்வாறான பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர். ஆனால் இந்த பிள்ளைகளுக்கு புதிய சமூகத்துடன் இணையாது. புதிய திறமைகள் உருவாகாது. புதிய வாய்ப்புகள் உருவாகாது. பாடசாலைகளும் ஊரும் ஒரே சமூக மட்டத்திலேயே இருக்கும்.
இதனால் இதில் மாற்றங்களை செய்ய வேண்டும். அது தொடர்பில் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது என்பது தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு போக்குவரத்து பிரச்சினைகள் இருந்தால் அதற்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்யலாம். இதேவேளை சகல மாவட்டங்களிலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் எனற ரீதியில் இருந்தாலும் ஆசிரியர பற்றாக்குறை நிலவுகிறது. 30 மாணவர்கள் இருக்கும் இடத்தில் 9 ஆசிரியர்கள் இருக்கும் பாடசாலைகளும் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் உள்ள பாடசாலைகளும் உள்ளன.
இதன்மூலம் மனித வளம் வீணடிக்கப்படுகிறது. இதனால் கல்வி மறுசீரமைப்பின் ஊடாக சகல பிள்ளைகளுக்கும் தரமான கல்வியை வழங்க நடவடிக்கை எடுப்போம். இதேவேளை சமூகம் தொடர்பான அக்கறை இல்லாத பிள்ளைகள் உருவாகின்றனர். இயந்திரங்கள் போன்றே பிள்ளைகள் வளர்க்கப்படுகின்றனர். அதிகாலை 4 மணிக்கு மேலதிக வகுப்பு நடக்கின்றது. அந்த வகுப்பு முடிந்து பாடசாலை சென்று பின்னர் மாலை நேர வகுப்புக்கு போகின்றனர். அதிகாலை 1 மணி வரையிலும் அவ்வாறு கற்க வேண்டியுள்ளது.
பிள்ளைகளுக்கு சிறுவர் வாழ்வு அவசியமில்லையா? இவ்வாறு பயணிக்க முடியாது. பிள்ளைகள் மீதான கல்வி சுமைகளை குறைக்க வேண்டும். இது எமது பொறுப்பாகும். பிள்ளைகளின் நிலைமையை பாருங்கள். தூர இடங்களில் இருந்தும் கொழும்பு பாடசாலைகளுக்கு பிள்ளைகள் வருகின்றனர். காலையில் தாய் எழுப்பும் போதும் பிள்ளை தூங்குகிறது, பஸ்ஸிலும் தூங்குகிறது. பாடசாலையிலும் தூங்குகிறது. இது பாவமில்லையா? பிள்ளை வெளியில் சென்று விளையாட வேண்டும். ஆனால் அதற்கு இடமளிக்கப்படுவதில்லை.
ரோபோ போன்று பிள்ளைகளை உருவாக்க வேண்டுமா? அதனை மாற்றியமைக்க வேண்டும். அதேபோன்று அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை உருவாக்கக்கூடியவாறு சிறந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளக்கூடிய வகையில் மறுசீரமைப்புகள் இடம்பெறும். கல்வி மறுசீரமைப்பு என்பது பரந்துபட்ட விடயமாகும். இது பாடவிதானங்களில் மறுசீரமைப்பு செய்வதில் மாத்திரம் நின்றுவிட முடியாது. மாணவர்களுக்கு போன்று ஆசிரியர்களும் புதிய விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
அதற்காக 5 வருடங்களுக்கு ஒரு முறை அவர்களுக்கு பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு விரிவான கல்வி மறுசீரமைப்பையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதனை உடனே செயற்படுத்த முடியாது. அதற்கு காலம் எடுக்கும்.
அதனால் அஅதற்கான வேலைத்திட்டத்தை இப்போது ஆரம்பித்தால் 2029ஆம் போது செயற்படுத்த முடியுமாகும். அதனால் இந்த நடவடிக்கையில் அரசியல் இல்லாமல் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



