உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வௌியேறிய மஹிந்த! நலம் விசாரிக்க குவியும் பிரமுகர்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜயராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து இன்று மதியம் வௌியேறியுள்ளார்.
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இதுவரை உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று (10) நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய அந்தச் சலுகையை அவர்கள் மூவரும் இழந்துள்ளனர். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) மதியம் 1.15 மணியளவில் தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார். எனினும் ஒருவாரத்தின் பின்னரே குறித்த இல்லத்தை அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
விஜயராம இல்லத்தில் இருந்து வௌியேறிய மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் செல்ல உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு இன்று காலை சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



