புத்தகப்பையுடன் மீட்கப் பட்ட என்புத் தொகுதிகள் 4 - 5 வயதுடைய சிறுமியின் எலும்புக்கூடாக இருக்கலாம்! சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன்

செம்மணி மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் சிறுவர்களின் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 - 5 வயதுடைய சிறுமியின் எலும்புக்கூடாக இருக்கலாம் என சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
யாழ் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை (15) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அம்மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி தொடர்பான அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
செம்மணி மனிதப்புதைகுழியில் இருந்து நீலநிறப்புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றுடன் அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுவன் அல்லது சிறுமிக்குச் சொந்தமானதாக இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்பட்ட என்புத்தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வறிக்கையை இம்மாதம் 15 ஆம் திகதிக்கு செவ்வாய்க்கிழமைக்கு முன்னதாக மன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா கடந்த 10 ஆம் திகதி கட்டளை பிறப்பித்திருந்தார்.
அதற்கமைய செவ்வாய்க்கிழமை (15) குறித்த என்புத்தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வறிக்கையை சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் மன்றில் சமர்ப்பித்தார். அதில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றுடன் அடையாளம் காணப்பட்ட எஸ் - 25 என அடையாளமிடப்பட்ட குறித்த என்புத்தொகுதி 4 - 5 வயதுடைய சிறுமியினுடையதாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அத்தோடு எஸ் - 48, எஸ் - 56 என அடையாளமிடப்பட்ட, சிறுவர்களுடையது எனச் சந்தேகிக்கப்படும் என்புத்தொகுதிகளுக்கும் புத்தகப்பையுடன் அடையாளம் காணப்பட்ட சிறுமியினுடைய என்புத்தொகுதிக்கும் இடையே உடைகள் மற்றும் என்பியல் சார்ந்த ஒத்த தன்மைகள் இருப்பதாகவும் மருத்துவ அதிகாரி பிரணவன் மன்றில் தெரிவித்தார்.
அதனையடுத்து சிறுவர்களுக்குச் சொந்தமானவை எனச் சந்தேகிக்கப்படும் குறித்த இரண்டு என்புத்தொகுதிகளிலும் என்பியல் ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிவானால் அறிவுறுத்தப்பட்டது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



